மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மு.வரதராசனார் அரங்கத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் கௌரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் முதன்மை விருந்தினராக இந்திய அறிவியல் கழக நிறுவன முன்னாள் இயக்குநர் பலராம் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், “மதுரையில் குரு பூர்ணிமா நாளில் பட்டமளிப்பு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சக்தி வாய்ந்த தமிழர்கள் உலக முழுவதிலும் ஆட்சி செய்து வருகிறார்கள். கூகுள் சுந்தர் பிச்சை, சிவநாடார், விஷ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பெருமை சேர்த்து வருகின்றனர்.
தமிழ் மொழியை உலகம் முழுவதிலும் எடுத்து சென்றவர் பிரதமர் மோடி, ஐநா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என கூறி பேச்சை தொடங்கியவர் மோடி. வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கவிஞர் பாரதியாரின் பெயரில் இருக்கை அமைத்தவர் மோடி. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழ்மொழி பெருமையை பரப்பி வருகிறார்.
தற்போதைய இளைஞர் சமூகம் இந்தியாவை ஆளும் சமூகமாக உலகளவில் செல்லக்கூடியவர்களாக மாறுவார்கள், வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். கரோனா சவாலை கடந்து இந்தியா பொருளாதாரத்தில் மேம்பட்டுள்ளோம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது இப்போது எப்படி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். 200 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கியுள்ளோம்.