மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில்,” பாஜக அரசு இந்தியப் பொருளாதாரத்தை பாழடைந்த நிலைக்கு கொண்டுசென்றுள்ளது. மன்மோகன்சிங் காலத்தில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் என்ற மாளிகையை, இன்றைய மோடி அரசு தாறுமாறாக சிதைத்துள்ளது.
ஜிஎஸ்டி வரியை கட்ட முடியாமல் பார்லே பிஸ்கட் நிறுவனம் ஒரே நாளில் 10 ஆயிரம் ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கியுள்ளது. நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோர் காலத்தில் எழுச்சிபெற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை குறைந்ததால் தற்போது உற்பத்தியைக் குறைத்துள்ளன.
இவ்வாறான, பொருளாதார நெருக்கடியில்தான் அரசை நடத்துகிறார் மோடி. பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்துவது, வரிவிதிப்பை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, அந்நிய மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் எவ்வாறு கொண்டுவருவது போன்ற அடிப்படை அறிவு இல்லாத மத்திய அரசால்தான் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை சீர்திருத்தவில்லையென்றால் விரைவில் இந்தியாவில் பஞ்சமும் வேலையின்மையும் பெருகும்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வில், 99 விழுக்காடு ஆசிரியர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதை அரசியல் பிரச்னையாக கருதவில்லை சமூக பிரச்னையாக நான் கருதுகிறேன். தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இதற்கு ஒரு மாற்று முயற்சியை எடுக்க வேண்டும்.
இப்பிரச்னையில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லையெனில், சிறந்த வருங்காலத்தை மாணவர்களுக்கு வழங்க முடியாது. முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடுகளுக்குச் சென்று அந்நிய மூலதனம் கொண்டு வரப்போவதாக சொல்கிறார். இதற்கு முன்பாக நடந்த இரண்டு முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன என்பது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆடம்பரமாக விழா நடத்தி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி காரணமாக மத்திய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக 10 ரூபாய்கூட ஒதுக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதிலளிக்கவேண்டும்.
2017இல் கண்டறியப்பட்ட குட்கா ஊழல் வழக்கில் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளதே இதற்குக் காரணம்” என்றார்.