மதுரை: மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் (Puthiya Tamilagam) சார்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “திமுக அரசு மதுவிலக்கைக் கண்டு கொள்வதில்லை எனவும், இதனால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள் எனவும், மதுவிலக்குக்கு எதிராக தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு புதிய தமிழகம் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இடையே சாதிய மனப்பான்மை மேலோங்கி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளக்கூடிய வகையில் மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது என்றார். திருநெல்வேலி நாங்குநேரியில் சமீபத்தில் பள்ளி மாணவன் மற்றும் அவரது சகோதரி சக மாணவர்களால் தாக்கப்பட்டார்கள். அந்த இருவரும் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையும், நீதிமன்றமும் அனுமதி வழங்க மறுத்து வருகிறது.
நாங்குநேரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றத்தில் தனது கட்சி சார்பாக வழக்கு தொடர்ந்து உள்ளோம். நாங்குநேரி மாணவன் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி என யாரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, அறிக்கை மட்டும் தான் வெளியிட்டுள்ளார்கள். இந்த சம்பவ பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள். தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் ஆதீனங்கள் மடாதிபதிகளின் சொத்துக்களை ஆய்வு செய்து, நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கி விவசாயத்தைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட முடியும். வானமாமலை கோயிலில் தலைவிரித்தாட கூடிய சாதி வெறியை அடக்க வேண்டும். அங்கு நடக்கக்கூடிய சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.