தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செக்கானூரணி அருகே கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் - சிற்பம் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது

மதுரை அருகே 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பம் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

செக்கானூரணி அருகே கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம்
செக்கானூரணி அருகே கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம்

By

Published : Dec 23, 2022, 6:33 AM IST

மதுரை அருகே 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பம் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கணவாய் கருப்பசாமி கோவில் எதிரே ஊரணி கரையில் 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது. மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின்முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி அஸ்வத்தாமன் ஆய்வாளர் அனந்த குமரன் ஆகியோர் பன்னியான் மலை கணவாய் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது கி பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் கூறியதாவது, "பழங்காலத்தில் ,தமிழர்களின் வழிபாட்டுமுறை இயற்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். அதன்பிறகு, பஞ்ச பூதங்கள் மற்றும் மரங்கள் ஆகியவை வழிபடு பொருட்களாகப் பாவிக்கப்பட்டன.இதன் தொடர்ச்சியாக வளமையின் குறியீடாகப் பெண்ணை வழிபடும் மரபு தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாக இடம்பெற்றது. கொற்றவை, தமிழகத்தின் மிகப் பழமையான பெண் தெய்வமாக தொல்காப்பியத்திலும், இலக்கியங்களிலும் "பழையோள் காணாமற் செல்வி" என்று குறிப்பிடப்பட்டு இருந்தாலும் கொற்றவையின் உருவ அமைப்பையும் வழிபாட்டு முறையையும் விவரிப்பது சிலப்பதிகார காப்பியமேயாகும் .

கொற்றவை சிற்பம்:செக்கனூரணியில் இருந்து மேலக்கால் செல்லும் சாலையில் கணவாய் கருப்பசாமி கோவில் எதிரே ஊரணி கரையில் புதைந்த நிலையில் கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது. இச்சிற்பம் 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி அளிக்கிறது. தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க, வட்ட வடிவிலான முகம் தேய்மானத்தோடு காணப்படுகிறது. இரு காதுகளில் பத்ர குண்டலங்கள் கழுத்தில் ஆரம் போன்ற அணிகலன், கைகளில் கைவளைகள் அனிந்து கம்பீரமாக நின்றவாறு அச்சிற்பம் காணப்படுகிறது.

கீழ் பகுதி மண்ணில் புதைந்து காணப்படுகிறது. அதன் கரங்களில் பிரயோகச் சக்கரம், சங்கு, ஏந்தியும் வலது கரத்தில் அபய முத்திரையும் செதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் மிக பிரமாண்டமாக எட்டு கைகளுடன் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட கொற்றவை காலப்போக்கில்

நான்கு கைகளோடு எளிமையான முறையில் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கைககள் கொண்டிருப்பதால் சதுர் புஜ துர்க்கை என்று அழைக்கப்படுகின்றது. விருதுநகர் மாவட்டம் பள்ளிமடத்தில் இச்சிற்பத்தை போன்ற கொற்றவை சிற்பம் உள்ளது. அந்த சிற்பம் இரண்டாம் வரகுண பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தவை. கொற்றவை உருவமைதியைப் பொறுத்து கி.பி 9ஆம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தாக இருக்கும் என்கிறார்.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மனுவை பரிசீலிக்க காவல் துறைக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details