கொடைக்கானல் கவுஞ்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், செல்வகணபதி, மல்லரசன், மணி, ரத்தினசாமி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில்,"கொடைக்கானல் அடுத்துள்ள மன்னவனூர் கவுஞ்சியில் 10 கோடி செலவில் மீன் விதைப் பண்ணை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 86.93 ஹெக்டேர் நிலத்தை மீன்வளத்துறைக்கு வழங்கி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 8.10.2018-ல் உத்தரவிட்டார்.
கவுஞ்சியில் மீன் விதைப் பண்ணை அமைக்க கோணலாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும்போது இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், விவசாயம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும்.
எனவே கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்களுக்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுத் தரப்பில் மீன் பண்ணையில் மீன்குஞ்சுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும். ஒரு முறை எடுக்கும் தண்ணீரை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இதனால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மீன் பண்ணையால் கவுஞ்சியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையேற்க மறுத்த நீதிபதிகள், கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் கவுஞ்சியில் மீன் பண்ணை அமைக்க 86.93 ஹெக்டேர் நிலத்தை மீன்வளத்துறைக்கு வழங்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், அந்த நிலத்தை மீண்டும் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கவும், வருவாய்த்துறை ஆவணங்களில் அந்த நிலம் மீன்வளத்துறைக்கு மாற்றப்பட்டிருந்தால், அதை ரத்து செய்யவும் உத்தரவிட்டனர்.