தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக வீடுகள்! - TN government

மதுரை: கஜா புயலில் வீடுகளை இழந்தோருக்கு நிரந்த வீடுகளை கட்டித்தருவதற்குள்ளாக தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் அமைத்துத்தர உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கஜாபுயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு போர்கால அடிப்படையில் தற்காலிக வீடு!

By

Published : Aug 2, 2019, 10:08 AM IST

தஞ்சை மாவட்டம் கரம்பயம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம், உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018 நவம்பர் 15ஆம் தேதியன்று இரவு ஏற்பட்ட கஜா புயலில் தங்கள் வீடு முற்றிலும் சேதமடைந்தது. இதற்காக இழப்பீடு வழங்கக்கோரி, வருவாய்த் துறையினரிடம் உரிய ஆவணங்களை கொடுத்தும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. அதனால் இழப்பீடு விரைவில் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சேதமடைந்த ஓட்டு வீடுகளுக்கு ஏன் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை? என்று கேள்வியெழுப்பினர். மேலும், கஜா புயலால் முற்றிலும் சேதமடைந்த வீடுகள் அனைத்துக்கும் உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுவருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் முழுமையாக அனைவருக்கும் வீடுகள் கட்டிமுடிக்கப்படும்' என மாநில அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, "ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக வேறு புயல் வந்தாலோ, பருவமழை தீவிரமானாலோ வீடுகளை இழந்தவர்கள் பாதிக்கப்படுவர். ஆகையால் அரசு வீடுகளை கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குள் தற்காலிக வீடுகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். இந்த வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க விரும்புகிறது.

ஆகவே, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த வழக்கை சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அப்போது அரசின் நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details