சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்டமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கீழடியை ஆய்வு செய்தார். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கீழடியில் ஏறத்தாழ பத்தாயிரம் பொருள்கள் கலை நுணுக்கம், தொழில் நுணுக்கம் வாய்ந்த கைவினை சிற்பம் வாய்ந்த பொருள்களை தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இதில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள பானை ஓடுகளில் எழுதப்பட்டுள்ள எழுத்துக் குறியீடுகள் அசோகர் காலத்திற்கு முற்பட்டவை, கிராமிய எழுத்து காலத்திற்கு முற்பட்டவைகளாகும். எனவே தமிழ் எழுத்துகளில் உடைய ஆய்வுகள் எழுத்தறிவு உள்ள ஒரு சமூகம் வாழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இங்கு எண்ணற்ற தங்கப் பொருள்கள் கிடைத்திருக்கின்றன. தங்கத்தினாலான அணிகலன்களாக கிடைத்துள்ளன.
சூது பவளம் எனப்படும் விரலளவு இருக்கக்கூடிய ஒரு பொருள் அதில் பன்றியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்ந்த வீடுகளில் நீரோட்டம் செல்வதற்கான வாய்க்கால்கள் அமைத்திருக்கிறார்கள். அதன்மேல் மூடப்பட்டுள்ள குழாய் போன்ற அமைப்புகளும் அமைக்கப்பட்டு உறை கிணறுகள் அமைத்து இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்பொழுது சிந்துவெளி நாகரிகத்திற்கு தொடர்புடைய நாகரிகமாகதான் கீழடி நாகரிகம் பறைசாற்றுகிறது.