சிவகங்கை, கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக 5ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி துவங்கிய இந்த அகழாய்வு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கீழடி 5ஆம் கட்ட அகழாய்வுப் பொறுப்பாளரும் கள அலுவலருமான ஆசைத்தம்பி, ஈடிவி பாரத் தமிழ் செய்திகளுக்காக அளித்த நேர்காணலில் அவர் பேசியதாவது,
"கடந்த 2018ஆம் ஆண்டு துவங்கி தற்போது வரை தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக 5ஆம் கட்ட அகழாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் வழிகாட்டுதலின் பேரில், இயக்குநர் சிவானந்தம் தலைமையில், 12 ஆய்வு மாணவர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினருடன் இங்கு அகழாய்வுப் பணியாற்றி வருகிறோம்.
சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 51 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பிடத்தக்க வகையில் பழந்தமிழரால் உருவாக்கப்பட்ட கட்டடப் பகுதிகள் கிடைத்துள்ளதுதான், 5ஆம் கட்ட அகழாய்வின் சிறப்பம்சமாக நாங்கள் பார்க்கிறோம்.
கடந்த 4ஆம் கட்ட அகழாய்வில் 5 ஆயிரத்து 820 தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. இந்த ஆய்வில் 750 தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மதம் அல்லது சமயம் தொடர்பான எந்த அடையாளங்களும் இல்லை. அது போன்ற அடையாளத்தைத் தருகின்ற எந்தவிதமான தொல்லியல் சின்னங்களும் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.