சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வு நடைபெறவுள்ளது. இது குறித்து அறிவிப்பு பொங்கலுக்குப் பின்னர் வெளியாகும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார்.
மேலும் கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு தொல்லியல்துறையின் சார்பாக நில உரிமையாளர்களிடமிருந்து ஒப்பந்தம் மூலமாக ஆய்வுக்காக நிலங்களைப் பெறுகிற பூர்வாங்கப் பணிகளும், ஆய்வுப் பணிகளும் நடைபெற்றுவந்தன.
இதனிடையே இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த கள அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் எனவும், ஆய்வுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பிப்.19ஆம் தேதி கீழடி 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.