தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2020, 12:01 AM IST

ETV Bharat / state

மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்கக் கோரிய வழக்கு: 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு!

மதுரை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு வருவாய்துறையின் ஆணையர் விதிகளின் அடிப்படையில் பரிசீலித்து எட்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் கலைஞருக்கு சிலை  திமுக தலைவர் கருணாநிதி மதுரை சிலை  Karunanidhi statue issue  Karunanidhi statue in madurai
மதுரையில் கருணாநிதிக்கு சிலை

மதுரை பசுமலையைச் சேர்ந்த தளபதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் 1969ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை 5 முறை முதலமைச்சராக இருந்தவர் மு.கருணாநிதி. தமிழ்நாட்டின் முதலமைச்சராக 6,863 நாட்கள் பொறுப்பு வகித்துள்ளார்.

அதோடு 10 முறை திமுகவின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற புகழுக்குரியவர். அவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி தனது 94ஆவது வயதில் உயிரிழந்தார். அத்தகைய புகழ்மிகு மனிதருக்கு மதுரையில் சிலை வைக்க அனுமதி கோரி செப்டம்பர் 2018ல் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

அவர் அரசியல்வாதி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் கூட. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தால் அவரது எழுத்துப்பணிக்கு ராஜராஜன் விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் அவருக்கு சிலை வைத்தால், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமையும். ஆனால், ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு சிலை வைக்க அனுமதி வழங்கும் அரசு நிர்வாகம், கலைஞர். கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதியளிக்க தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுரை சிவகங்கை சாலை பால்பண்ணை சந்திப்பு பகுதியிலோ மதுரை பழங்காநத்தம்- திருப்பரங்குன்றம் பைபாஸ் ரவுண்டானா சந்திப்பிலோ சிலை வைக்க அனுமதி கோரியிருந்தோம். ஆகவே, திமுகவின் முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு, மதுரையில் சிலை வைக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில், “இந்த விவகாரத்தில் நாங்களாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. வருவாய்த்துறையின் ஆணையரே இதுகுறித்து முடிவெடுக்க இயலும்” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, தமிழ்நாடு வருவாய்த் துறையின் ஆணையரை வழக்கில் நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்ப்பதாக உத்தரவிட்டார். தொடர்ந்து மதுரையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைப்பது குறித்து விதிகளின் அடிப்படையில் தமிழ்நாடு வருவாய்த் துறையின் ஆணையர் பரிசீலித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க: 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னது பொய்' - மன உளைச்சலில் சிவகாசி சிறுமியின் குடும்பத்தார்

ABOUT THE AUTHOR

...view details