உலக அளவில் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 30 நாட்களாக இதன் பாதிப்பு தமிழ்நாட்டில் தீவிரமடைந்து இரண்டாம் கட்ட நிலையை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் பெருந்தொற்றால் 1,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 22 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம் முழுவதும் எல்லைகள் மூடப்பட்டு, சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேலூர் சோதனைச் சாவடியில் காவல் துறையினர் நேற்று நள்ளிரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் அங்கு நுழைய முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த காரைக்குடிப்பட்டி, கச்சிராயன்பட்டி, சொக்கம்பட்டி, சிவகங்கை மாவட்டம் மணலூரை அடுத்த கருங்குறிஞ்சிப்பட்டி ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கர்நாடகா டூ தமிழ்நாடு : பைக்கில் மதுரை வந்தடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி! மேற்கண்ட 4 பேரும் கர்நாடகா மாநிலம், குல்பர்காவில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். கரோனா வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அவர்கள் குல்பர்காவில் சிக்கிக் கொண்டனர் என்றும்; எனவே 4 பேரும் கர்நாடகாவில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் புறப்பட்டு மதுரை வந்து சேர்ந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அங்கிருந்த சுகாதாரத் துறை அலுவலர்கள் அவர்களிடம் கரோனா வைரஸ் தொற்று கண்டறிதல் பரிசோதனை நடத்தினர். அதில் அவர்களுக்கு நோய்த் தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியானது. இருந்தபோதிலும் மேற்கண்ட நான்கு பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க :ஊரடங்கு காலத்தில் அரசு வாழ வழி செய்யுமா - கண்ணீரில் தவிக்கும் வாழை விவசாயிகள்