புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகாவின் பஞ்சாயத்து கவுன்சிலர் மாலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரம்பக்குடி ஒன்றிய பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்று 2020ஆம் ஆண்டு பதவி ஏற்றுக் கொண்டேன். 2020 ஜூன் 7ஆம் தேதி கரம்பக்குடி ஒன்றிய பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இதில், 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரம்பக்குடி ஒன்றிய பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர்கள் எனக்கு தகவல் தெரிவிக்காமல் 78, 79, 80 ஆகிய தீர்மானங்களை மாற்றி புதிய தீர்மானங்களை வைத்துள்ளனர். மேலும், கரம்பக்குடி பஞ்சாயத்து அலுவலகம் வெளியே புதிதாக அமைக்கப்பட்ட மின்கம்ப திறப்பு விழா (அரசு விழா) பற்றி எனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்த விழாவிற்கு என்னை அழைக்கவும் இல்லை. இதேபோல், புதிய தண்ணீர் தொட்டி 17 லட்சம் செலவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கும் முறையான அழைப்பு எனக்கு விடுக்கப்படவில்லை.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தகவல் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994 படியும், 1997ஆம் ஆண்டு வெளிவந்த அரசு ஆணையின் படியும் பஞ்சாயத்து சேர்மனுக்கு உரிய அழைப்பு மற்றும் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று உள்ளது.