மதுரை:கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரு பகுதியைச் சேர்ந்தவர் சகாய அந்தோணி. இவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட குழு உறுப்பினராக உள்ளேன்.
நான் திருவட்டாறு பஞ்சாயத்து யூனியன் 9ஆவது வார்டு கவுன்சிலராகவும் உள்ளேன். உள்ளாட்சி தேர்தலில் நடந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, தவறுதலாக திமுகவைச் சேர்ந்த ஜான் ரைட் என்பவர் என் மீது விரோதம் கொண்டு பலவித தொந்தரவுகளை தந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நான் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் என்னை வழிமறித்து கொலை செய்யும் நோக்கில் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தேன். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்றேன். அங்கு கோமா நிலையில் இருந்தேன்.
நினைவு திரும்பிய பிறகுதான் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவந்தது. இது குறித்து நான் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அலுவலர் மாற்றப்பட்டார். விசாரணையில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (ஜன.25) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. மேலும் விசாரணை அலுவலர் மாற்றப்பட்டுள்ளார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது எனக் கூறி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தரமற்ற உணவு வழங்கினால் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து - அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்