தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தொடங்கிய கந்தசஷ்டி விழா! - Subramaniya swamy Temple

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று(நவ.15) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

By

Published : Nov 15, 2020, 9:33 PM IST

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாதம் ஏழு நாள்கள் கொண்டாடப்படும் இந்த விழா இன்று(நவ.15) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினையொட்டி கோயில் விசாக கொறடு மண்டபத்தில் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன .தொடர்ந்து கோயில் சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு கோயில் ஸ்தானிகர் பட்டர்கள் கந்தசஷ்டி காப்பு கட்டினர். இதையடுத்து உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக உற்சவர் முருகன் தெய்வானைக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இவ்விழாவினை ஒட்டி தினமும் முருகன், தெய்வானையுடன் கோயில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். தினமும் காலை 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகர் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும். பிறகு சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி ,தெய்வானை, உற்சவர் சன்னதியில், முருகன் தெய்வானையும் தினமும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

மேலும் விழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 19ஆம் தேதி மாலை 7 மணி அளவில் கோவர்த்தனாம்பிகையிடம் சூரனை அழிக்க முருகப் பெருமான் வேல் வாங்கும் வைபவம் நடைபெறும். தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்ச்சியாக 20ஆம் தேதி முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும், சூரசம்ஹார லீலை நடைபெறும். விழாவின் நிறைவு நாளான 21ஆம் தேதி மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனம் நடைபெறும். இம்முறை கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details