மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நாளை (ஏப்ரல்.16) காலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் நடைபெற உள்ளது. நடக்கவிருக்கிறது. அப்போது கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்து, ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொண்டு வைகை ஆற்றில் இறங்குவார்.
இதற்காக அழகர் கோயிலிலிருந்து, கள்ளழகர் நேற்று மாலை (ஏப்.14) அதிர்வேட்டு முழங்க தங்கப்பல்லக்கில் பரிவாரங்களுடன் மதுரை நோக்கி புறப்பட்டார். அப்போது அவருக்கு கண்டாங்கி பட்டலங்காரம், கையில் சங்கு, சக்கரம், நேரிக்கம்பு, வளைதடி கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
முன்னதாக பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில் முன்பு கள்ளழகருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தப்பட்டன. வழிநெடுகிலும் உள்ள பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல், மூன்று மாவடி வரை உள்ள மண்டகப்படிகளில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தந்தார்.