மதுரை: இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கடலூரில் மணல் கொள்ளை அபரிவிதமாக நடந்துள்ளது. அதனால் ஏற்பட்ட குழியில் தான் பெண்கள் சிக்கி மூழ்கி இறந்துள்ளனர். இதே போல குவாரிகளில் தோண்டப்படும் குழிகளையும் மூடாமல் விடுவதால் பெரும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் நீச்சல் பயிற்சியை கட்டாயமாக்கவும் தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும். இதே போல விழுப்புரத்தில் 3 குழந்தைகள் இறப்புக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. நிவாரணம் வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது.
தமிழ்நாட்டில் கஞ்சா, போதை வியாபாரம் அதிகரித்து உள்ளது. அதைத்தடுக்க போர்க்கால நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். தூய்மைப்பணியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளில் போடப்பட்டுள்ள ஒப்பந்தப் பணிகளை ஒழித்து, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கும் பணிகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும்.
ஆர்.எஸ். எஸ் பணிக்கு மாறும் ஆன்மிகவாதிகள்:மதுரையில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் ஆன்மிகவாதிகள் பேசிய பேச்சுகள் ஏற்க முடியாதவை. மதுரை ஆதீனம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார். இஸ்லாமியர்கள் தேச விரோதிகள், கம்யூனிஸ்ட்டுகள் தேச அக்கறை இல்லாதவர்கள் என்று பேசி உள்ளார்கள். இதை ஆதீனம் பேச என்ன உரிமை இருக்கிறது?
ஆதீனம் அரசியல் பேசலாம். ஆனால், இஸ்லாமியர்களை தேச விரோதிகள் எனப் பேசுவது என்ன விதமான அரசியல்?. மோடிக்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஆதீனம் பேசினால், ஆன்மிகப்பணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பணிக்கு மாறிவிட்டீர்கள் என்பதைத்தான் காட்டுகிறது. ஆதீனம் என்கிற பெயரில் மதவெறி கூடாரமாக மடங்கள் மாறிவிடக்கூடாது. ஆதீன மடங்கள் என்ன அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளா?