தமிழ்நாட்டில் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து தேர்வுப்பணிகளை பள்ளிக் கல்வித் துறை மும்முரமாக செய்துவருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (ஜூன் 4ஆம் தேதி) பிற்பகல் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டன.
மதுரை வருவாய் மாவட்டத்தில் மதுரை, திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி என நான்கு கல்வி மாவட்டங்கள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், "மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 40 ஆயிரத்து 124 மாணவ, மாணவியர் மற்றும் 936 தனித்தேர்வர்கள் எழுதுகின்றனர்.
அதற்காக 469 தேர்வு மையங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 8, 9ஆம் தேதிகளில் வழங்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மாணவ மாணவியர் தாங்கள் பயிலும் பள்ளிகளில் ஜூன் 8, 9ஆம் தேதிகளில் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் அரசு சார்பில் வழங்கப்படும். தேர்வு மையங்களில் ஒரு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு தொடங்கும் முன்னரும் தேர்வு முடிந்த பிறகும் தேர்வு அறைகளில் உள்ளாட்சி அமைப்புகளோடு இணைந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் வெப்பமானி கொண்டு பரிசோதிக்கப்படுவார்கள்.
தேர்வின்போது பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசித்து மாணவர்களின் போக்குவரத்துக்கு கூடுதலாக பேருந்துகள் தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.