தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை! - நீதித்துறையை விமர்சித்தது தொடர்பான வழக்கில் உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு

ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூ-ட்யூப் சேனலில் பேசியது தொடர்பான வழக்கில், யூ-ட்யூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது.

judiciary
judiciary

By

Published : Sep 15, 2022, 7:13 PM IST

Updated : Sep 15, 2022, 7:31 PM IST

சென்னை: ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூ-ட்யூப் சேனலில் பேசியது தொடர்பாக, யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று(செப்.15) நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.

அதில், "இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்கு உட்பட்டதல்ல. ஆகவே இந்த வழக்கை மதுரைக்கிளை விசாரிக்க இயலாது. பிராமணர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 3% இருந்தாலும், நீதித்துறையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஆனால், பெருமளவில் பட்டியல் இனத்தவர்கள் இருந்தாலும், நீதித்துறையில் அவர்களின் பங்கு மிகக்குறைவாகவே உள்ளது. அருந்ததியர் இனத்தில் ஒரு நீதிபதி கூட இல்லை. இதனால், பட்டியலின நீதிபதிகள் வழக்குகளைக் கையாளும்போது, முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை.

பிற நீதிபதிகளின் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுதொடர்பாக பல நீதிபதிகள் அளித்த தரவுகளைக் குறிப்பிட்டே இந்த கருத்தைப் பதிவு செய்துள்ளேன். எனது சில கருத்துகளைத் தனியே பார்க்கும்போது பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், அதன் பின்புலத்தோடு பார்த்தால் உண்மை விளங்கும். நீதித்துறையின் மதிப்பை களங்கப்படுத்துவது எனது நோக்கமல்ல. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு. பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செப்.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Last Updated : Sep 15, 2022, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details