மதுரை:விருதுநகர் சாத்தூரைச் சேர்ந்த ராமசுப்பு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'எங்கள் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில் சிலர் அனைவருக்கும் பொதுவான நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி வருகிறார்கள். இதனை அகற்ற வேண்டும்' என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாட்டாட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கையெழுத்து, தேதி குறிப்பிடப்படாமல் இருந்தது.
இதனைப்பார்த்து கோபமடைந்த நீதிபதிகள், 'அலுவலர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் அறிக்கைகளில் முறையாக கையெழுத்திட்டு தேதி குறிப்பிட வேண்டும், அவ்வாறு இல்லாமல் வெறும் அறிக்கை தாக்கல் செய்தால் நாங்கள் எவ்வாறு உத்தரவில் குறிப்பிடுவது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என எச்சரித்தனர்.
மேலும் 'இனி தேதி, கையெழுத்து குறிப்பிடாமல் இருந்தால், அந்த அலுவலரை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நேரிடும், அதுமட்டுமின்றி அன்று முழுவதும் அவர்கள் நீதிமன்றத்தில் காத்திருக்க நேரிடும்' என கருத்துக் கூறி வழக்கினை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:'மாணவர்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரியது' - உயர் நீதிமன்றம்