தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்களே ஊழல்வாதியாக மாறிவிட்டார்கள் - நீதிபதிகள் வேதனை!

மதுரை: வாக்காளர்கள் 10 ஓட்டு, 15 ஓட்டு என பேரம் பேசி வாக்கிற்கு பணம் வாங்குகின்றனர். பொதுமக்களே ஊழல்வாதியாக மாறிவிட்டதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
Madurai Branch High Court

By

Published : Dec 7, 2020, 5:31 PM IST

வழக்கறிஞர் ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல்செய்தார். அதில், "தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனா பாதிப்பால் அக்டோபர் 31ஆம் தேதி உயிரிழந்தார். கும்பகோணம் நகரில் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் பலரின் வீடுகளில் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக உண்மையை மறைத்து துரைக்கண்ணு ஆதரவாளர்கள் மீது கும்பகோணம் தாலுகா, கிழக்கு, பாபநாசம் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கும்பகோணத்தில் ரூ.800 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும், இப்பணம் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக தலைமையால் கொடுத்துவைக்கப்பட்டிருந்தாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதிலிருந்து மே மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிமுக தலைமை, அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கோடிக்கணக்கான ரூபாயை ரகசியமாக பதுக்கிவைத்திருப்பது தெரிகிறது.

இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இல்லை. நீதிமன்றத்தால் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளை உருவாக்க முடியும்.

கும்பகோணத்தில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஆளும் கட்சியினரால் ரூ.800 கோடி பதுக்கிவைத்திருந்தது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் வழியாகப் புகார் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, கும்பகோணத்தில் அதிமுகவினர் பதுக்கியதாக கூறப்படும் ரூ.800 கோடி தொடர்பாகவும், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்தும் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும், கும்பகோணம் ரூ.800 கோடி விவகாரம் குறித்தும், அது தொடர்பாக பதிவான மூன்று வழக்குகளின் பின்னணி குறித்தும் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், வாக்காளர்கள் 10 ஓட்டு, 15 ஓட்டு என பேரம் பேசி வாக்கிற்கு பணம் வாங்குகின்றனர். பொதுமக்களே ஊழல்வாதியாக மாறிவிட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல்வாதிகள் 50 முதல் 60 கோடி வரை சட்டவிரோதமாகத் தேர்தலுக்குப் பணம் செலவு செய்கின்றனர்.

வருமானவரித் துறைக்குத் தெரிந்தே அரசியல் கட்சிக்கு இடையே தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அடிப்படை முறையே சரியில்லை, எனவே மாற்றம் ஒவ்வொருவரிடமிருந்து தொடங்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை விரிவான உத்தரவிற்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியா, பிரேஸர் தீவில் பற்றி எரியும் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகள் உயிருக்கு அச்சுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details