அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் வழக்குத் தாக்கல்செய்தார்.
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், ”தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.
இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை. எனவே எனது மனு அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோரின் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான புகார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி சத்தியநாராயணனும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதில் எவ்வித பயனும் இல்லையென என நீதிபதி ஹேமலதா தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டனர்.