தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவாலயம் சென்ற மருத்துவரின் சாதிச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் கண்டனம் - Judges condemns collector who cancelled doctors caste certificate for visiting church

தேவாலயம் செல்வதற்காக மருத்துவரின் சாதிச் சான்றிதழை ரத்து செய்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாதி
சாதி

By

Published : Oct 9, 2021, 8:22 PM IST

மதுரை: ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நான் பள்ளிப் படிப்பை முடித்தபிறகு மதுரை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவம் பயின்று, தற்போது தற்காலிக அடிப்படையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன்.

நான் இந்து பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். எனது, தந்தையும் தாயும் இதே வகுப்பைச் சேர்ந்தவர்கள் . நான் கிறிஸ்துவரை திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய சான்றிதழில் நான் இந்து பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றே உள்ளது.

சான்றிதழ் ரத்து

இந்தச் சூழலில் நான் அரசு மருத்துவர் நியமனத்துக்கான டிஎன்பிசி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றேன். அப்போது நடைபெற்ற சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பின்போது, நான் மாவட்ட ஆட்சியர் முன் ஆஜராகி, இந்து பள்ளர் என்பதற்கான சான்றிதழ்களை வழங்கினேன்.

ஆனால் எனது வீட்டில் கிறிஸ்துவ லட்சினை உள்ளது என்றும், எனது கிளினிக்கில் கிறிஸ்தவம் தொடர்பான சிலுவை உள்ளதாகவும் கூறி எனது இந்து பள்ளர் சாதிச் சான்றிதழை 2013ஆம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டனர்.

ரத்து செய்க

எனவே எனது சாதிச் சான்றிதழை ரத்து செய்து உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி , நீதிபதி துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சாதி

அப்போது நீதிபதிகள், “மனுதாரரின் தாய், தந்தை இந்து பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதன் அடிப்படையில் மனுதாரர் இந்து பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர் என்று சான்றிதழ் பெற்றுள்ளார். இந்த நிலையில் எந்தவித ஆதாரமுமின்றி மனுதாரர் வீட்டில் கிறிஸ்தவ லட்சினை இருந்தது, கிறிஸ்தவ மதம் தொடர்பான அடையாளங்கள் இருந்தன என்றும், குடும்பத்துடன் தேவாலயத்துக்கு செல்கிறார் என்று கருதி அவருடைய இந்து பட்டியலின சாதிச் சான்றிதழை ரத்து செய்ததும் ஏற்புடையது அல்ல.

மாற்று சமுதாயத்தினரை முறைப்படி நடத்த வேண்டும்

ஒவ்வொருவரும் மற்றொரு மதத்தைச் சார்ந்தவரை, மற்றொரு சமுதாயத்தை சார்ந்தவரை முறைப்படி உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும். பிறர் பழக்க வழக்கங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இதுதான் அரசியலமைப்பு நமக்கு கற்றுக்கொடுத்த பாடம். எனவே மனுதாரர், குடும்பத்துடன் தேவாலயத்துக்கு செல்கிறார். அவர் வீட்டில் கிறிஸ்துவ அடையாளங்கள் உள்ளன என்று கூறி அவரது சாதிச் சான்றிதழை எந்தவித ஆவணமும் இன்றி ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ளக்க முடியாது.

நீதிபதிகள் கண்டனம்

சாதிச் சான்றிதழ் வழங்குவதில் அலுவலர்கள் பரந்த மனப்பான்மையுடன் தெளிவாக மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்து மனுதாரரின் சாதிச் சான்றிதழை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:3,000 கிலோ ஹெராயின்: சென்னையில் 10 மணிநேரமாக தொடரும் என்ஐஏ ரெய்டு

ABOUT THE AUTHOR

...view details