மதுரை: தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட காவல் சரகப் பகுதிகளில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இத்தகவலின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினர், சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட பலரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான மனு இன்று (செப்.15) நீதிபதி புகழேந்தி முன்னர் விசாரணைக்கு வந்தது.
ஜாமீன் வழங்க அனுமதியும், மறுப்பும்...
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அரசு மதுபானக் கடைகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை அவர் வாங்கி, பதுக்கி, விற்பனை செய்துள்ளதாகவும் கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, வேறு நிலுவை வழக்குகள் இல்லாத மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கியும், ஏற்கனவே பல குற்ற வழக்குகள் உள்ள மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.