J. C. Kumarappa: தஞ்சை மண்ணை பூர்வீகமாகக் கொண்ட குமரப்பா, கடந்த 1892ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் செல்லதுரை கார்னீலியஸ் என்பதாகும்.
சென்னையிலுள்ள கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை வரலாறு பயின்றார். தன்னுடைய மேற்படிப்பிற்காக லண்டன் சென்று வர்த்தகக் கணிதவியலில் பட்டம் பெற்று சிறந்த கணக்காளராக விளங்கினார்.
ஆங்கிலேயே ஆட்சியில் இந்திய அரசுப் பணியில் இணைந்த குமரப்பா, பிறகு கணக்குத் தணிக்கையாளராக மும்பையிலுள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார்.
பின்னர் தனியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால், எதிலும் அவருக்கு மனம் ஒப்பவில்லை. இந்திய ஏழ்மை நிலைத்தொடர்ந்து அவரது மனசாட்சியை உறுத்திய வண்ணம் இருந்தது.
ஜே.சி.குமரப்பாவின் 130ஆவது பிறந்த தினம் யங் இந்தியாவில் கட்டுரை
இந்நேரத்தில்தான் பொதுநிதியும், இந்தியாவின் வறுமையும் என்ற தலைப்பிலான தனது ஆய்வேட்டிற்கு முன்னுரை வழங்குவதற்காக மகாத்மா காந்தியைத் தொடர்பு கொண்டார்.
இதுதான் காந்தியோடு குமரப்பாவிற்கு ஏற்பட்ட முதல் தொடர்பு. காந்தியடிகள், குமரப்பாவின் இந்த ஆய்வேட்டைப் படித்துப் பார்த்தபின்புதான், சுதேசி இயக்கத்தின் அடிப்படைத் தத்துவம் அதிலிருப்பதை உணர்ந்தார்.
ஆகையால் காந்தியடிகள் குமரப்பாவின் அனுமதியோடு தன்னுடைய 'யங் இந்தியா' இதழில் அதுகுறித்தான கட்டுரையை வெளியிட்டார்.
கிராமங்களின் பொருளாதாரச் சூழல்
இந்நிகழ்விற்குப் பிறகு, காந்திக்கும் குமரப்பாவுக்கும் இடையிலான நட்பு நெருக்கமானது. இதன் பொருட்டு இந்தியக் கிராமங்களின் பொருளாதாரச் சூழல், வறுமை, தற்சார்பு நிலை ஆகியவை குறித்து அறிக்கைத் தயாரிக்கும் பணியை குமரப்பாவுக்கு வழங்கினார்.
அகமதாபாத்திலிருந்த குஜராத் வித்யா பீட மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு மூன்று மாதங்கள் இந்தியா முழுவதும் 54 கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதன் அறிக்கையை காந்தியிடம் வழங்கினார்.
இந்தியப் பொருளியல் குறித்த ஆய்வுகளில் முதன்மையான ஆய்வறிக்கையாக இன்றளவும் அந்த அறிக்கை திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வழிகாட்டி
இந்திய விவசாயம், கிராமப்புறத்தொழில்கள் சார்ந்த பார்வை, தற்சார்பு ஆகியவற்றின் அடிப்படையோடு கூடுதலாக ஜே.சி.குமரப்பாவின் ஆய்வுகள் பெரிதும் காந்தியடிகளுக்கு உதவியாக இருந்தன.
இந்நிலையில் தன்னுடைய அரசியல் வழிகாட்டியாக ஜே.சி.குமரப்பா காந்தியடிகளை ஏற்றுக் கொண்டார்.
கடந்த 1934ஆம் ஆண்டு காந்தியை தலைவராகக் கொண்ட அகில பாரத கிராமத் தொழிற்சாலைகளின் அமைப்பில் ஜே.சி.குமரப்பா செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். ரவீந்தரநாத் தாகூர், பி.சி.ராய் மற்றும் சி.வி.ராமன், ஜே.சி.போஸ் ஆகியோர் இந்த அமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இருந்தனர்.
சிறையிலடைப்பு
ஒரு கட்டத்திற்குப் பிறகு குமரப்பாவை காந்தியின் மனசாட்சியாகவே எல்லோரும் பார்க்கத் தொடங்கினர்.
தொடர்ந்து யங் இந்தியாவில் வெளியான குமரப்பாவின் கட்டுரைகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களை உறங்கவிடாமல் செய்தன. இதன் காரணமாக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். குமரப்பாவின் பல்வேறு நூல்களுக்கு காந்தியடிகளே முன்னுரை வழங்கினார்.
பொருளாதாரப் பார்வை
நிலத்தடி எரிபொருள் சார்ந்த பொருளாதாரம் நிலையற்றது மட்டுமல்ல. சுற்றுச்சூழலை நாசம் செய்யக்கூடியது. வன்முறையற்ற பொருளாதாரமே பூமியின் இயற்கை வளத்தைச் சுரண்டி அழிக்காமல், அதனை சமநிலைப்படுத்தி வைக்க வழிவகுக்கும் என்பதே குமரப்பாவின் பொருளாதாரப் பார்வையாகும்.
இயற்கை வளம் நமது பாரம்பரிய சொத்து. எதிர்வரும் தலைமுறையினருக்கும் அதை விட்டுச் செல்ல வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார். ஜெர்மானிய தேசத்து பொருளியல் அறிஞர் ஷ மாக்கர், குமரப்பாவை இந்தியத் தத்துவ மேதை என்று பாராட்டினார்.
குமரப்பாவைக் கற்போம்
இயற்கை வேளாண் அறிஞர் பாமயன் தொலைபேசி வழியே நம்மிடம் கூறுகையில், "இன்று நாம் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிக்களுக்குத் தீர்வு சொன்னவர்.
நாட்டின் பொருளியல் பாதை எப்படி இருக்க வேண்டும் என்று தடம் பிடித்துக் காட்டியவர். பெருமளவு உற்பத்தித்தேவையில்லை, பெருமளவு மக்களால் செய்யப்படும் உற்பத்தியே தேவை என்று கூறியவர்.
இயற்கைவளங்களைச் சுரண்டுவதை எதிர்த்தவர், அதற்கான மாற்றுக்களையும் கூறியவர், பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க முனைந்தவர். உலகளாவிய பசுமைச் சிந்தனையாளர்களுக்கு அறிவு ஊற்றாக இருந்தவர்.
இயற்கை வேளாண்மை, தாவர எண்ணெய் விளக்கு, கைசெய் தாள் தயாரிப்பு, எண்ணெய்ச் செக்கு, இயற்கை முறை தோல் பதனிடுதல், இயற்கைச் சாயம், கைத்தறி பருத்தி ஆடைகள், பனைப் பொருளாதாரம் என்று இன்று பேசப்படும் தற்சார்புச் செயல்பாடுகள் யாவற்றுக்கும் முன்னோடியாக இருந்து செய்து காட்டியவர்.
அதை பல நூல்களாக நமக்கு வடித்து வைத்தும் சென்றுள்ளார். குமரப்பாவின் பிறந்தநாளைப் போற்றுவதோடு மட்டுமல்லாது, குமரப்பாவைக் கற்போம், பசுமையான உலகைப் படைப்போம்" என்றார்.
தனிமனிதர்களின் கடமை
உலகத்தின் பல்வேறு பொருளாதார அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற ஜே.சி.குமரப்பா, கடந்த 1953ஆம் ஆண்டு உடல் நலம் நலிவுற்ற நிலையில், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியிலுள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தங்கினார்.
இங்கு தான் வசித்த ஐந்து ஆண்டுகளில் சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார்.
பிறகு உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டு சென்னை சென்று மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை மேற்கொண்டார். கடந்த 1960ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் உயிர் நீத்தார். தன்னுடைய 68ஆம் வயதில் மரணமடைந்த ஜே.சி.குமரப்பாவின் அஸ்தி, அவர் தனது இறுதி ஆண்டுகளைக் கழித்த தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் இன்றைக்கும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தற்சார்பு பொருளாதாரத்தின் தந்தை ஜே.சி.குமரப்பாவை நினைவு கூர்வது ஒவ்வொரு காந்தியவாதிகளின் கடமை மட்டுமல்ல... தனிமனிதர்களின் கடமையும் நன்றியறிதலுமாகும்.
இதையும் படிங்க:கழிப்பறைப் பயன்பாடு குறித்து ஐஐடி மாணவர்களின் விழிப்புணர்வு