மதுரை:திருநெல்வேலியைச் சேர்ந்த பாப்புலர் முத்தையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "நெல்லை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில், முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் நீக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரது புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அது அரசாணை எண் 457 பொதுத்துறை 2006-க்கு எதிரானது. எனவே, அம்மா உணவகங்களில் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்களை வைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில, கடந்த ஆட்சியில் அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் படங்கள் இடம்பெறவில்லை. மேலும், இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கு குறித்து தமிழ்நாடு நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பவும், மேலும் அரசு வழக்கறிஞர் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறி வழக்கை நவம்பர் 10ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:’ஆவின் இயக்குநர்களுக்கான தேர்தலை நடத்தக் கூடாது’ - நீதிமன்றம் உத்தரவு