மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் உள்ள மேலக்கோட்டை கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற அன்னதான விழாவை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், 'பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முதலமைச்சர் அறிவித்து அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே மதுரையில் அதற்கான திட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் நடைபெறவில்லை என்று பொய் பரப்புரை செய்து வருபவர்கள், சந்தேகம் இருப்பவர்கள் பணி நடைபெற்றுவரும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டால் உண்மை புலப்படும். விமானப் போக்குவரத்து, ரயில் முனையம் அமைப்பது போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திய பின்னரே திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும்.
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து விளக்கமளித்த அமைச்சர் உதயகுமார் ஜீ பூம் பா... என்றவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடாது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறை சொல்லி பாடும் ஒப்பாரிப் பாடலை மக்கள் கேட்க விரும்பவில்லை. அவருடைய சேனலையும் பார்க்க விரும்பவில்லை' எனக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் டைடல் பார்க்: 30,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு