தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலப் பெயர்களாக மாற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார். இது பல்வேறு மட்டங்களில் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தென் தமிழகத்தின் வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுச் சிறப்பும் கொண்ட மதுரை கடந்த 2000 ஆண்டுகளாக, அதே பெயரைத் தொடர்ந்து தாங்கி வருவதுடன் அல்லாமல் அந்தப் பெயருக்கான தமிழ்க் கல்வெட்டையும் ஆதாரமாகக் கொண்டு திகழ்கிறது.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திக்கு வழக்கறிஞர் லஜபதிராய் அளித்த சிறப்புப் பேட்டியில், ”மருத மரங்கள் நிறைய இருந்ததால் மருதை என்று அழைக்கப்பட்டு, பின் நாள்கணக்கில் அது மதுரையாக மாறியது என்று ஒரு கதை உண்டு. புராணக் கதைகள் மூலமாக சிவபெருமான் தலையிலிருந்து விழுந்த மதுரத்தின் பெயராலும் மதுரை என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மதுரை என்ற பெயருக்கான ஆதாரமாக அழகர்கோவில் மலை, அணைப்பட்டி சித்தர்மலை ஆகியவற்றில் உள்ள கல்வெட்டுகளே இன்றைக்கும் சான்றுகளாக உள்ளன.
அக்குறிப்பிட்ட அழகர் மலையில் காணப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்க் கல்வெட்டில் 'மதிரய் பொன் கொல்வன் அதன் அதன்' என்றும், ' மத்திரைகே உபு வணிகன் வியகன்' என்றும் குறிப்பிடப்படுகிறது. அதேபோன்று விக்ரமசிங்கபுரம் சித்தர்மலை மேட்டுப்பட்டியில் 'அமணன் மதிரை அத்திரன் உறை உதயணஸ' என்றும் மதுரையின் பெயர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மதுரையின் பெயர் குறித்த மிகப்பழமைவாய்ந்த கல்வெட்டுச் சான்றுகள் ஆகும்” என்கிறார்.
இது ஒருபுறம் இருக்க இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கும் மதுரை என்ற பெயருக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகக் கூறுகிறார் மதுரை மாவட்ட முன்னாள் நூலகர் பாண்டுரங்கன்.
”மதுரையின் ஆங்கில உச்சரிப்பில் பெருங்குழப்பம் இருந்ததால், மதுரைக்கு வர வேண்டிய பல்வேறு கடிதங்கள், திட்டங்கள் ஆகியவை வட மாநிலத்தில் கிருஷ்ணர் பிறந்த ஊரான மதுராவுக்குச் சென்றன. இதனால் 1962ஆம் ஆண்டு அன்றைய மதுரையின் நகராட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியின் டி.கே. ராமா பொறுப்பிலிருந்தபோது, இந்தப் பெயர் குழப்பத்திற்கு முடிவுகட்ட அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆன்மிகவாதிகள் எனப் பல்வேறு தரப்பினரைக் கூட்டி ஆலோசித்தார். இறுதியில், 'MATHURAI' மற்றும் 'MADURAI' என இரண்டு பெயர்களைத் தீர்மானமாக இயற்றி அன்றைய பிரதமர் நேருவின் பார்வைக்கு அனுப்பிவைத்தார்.
மதுரையின் பெயரை தேர்வுசெய்த நேரு நேருவும் MADURAI என்ற ஆங்கிலப் பெயரைத் தேர்வுசெய்து, தொடர்ந்து அதனையே பயன்படுத்துமாறு உத்தரவிட்டு அனுப்பிவைத்தார். அன்றிலிருந்து தற்போது வரை நாம் பயன்படுத்தி வரும் மதுரைக்கான ஆங்கில உச்சரிப்பு 'MADURAI' என்பதைத்தான். தற்போது தமிழ்நாடு அரசும் இந்தப் பெயரே தொடரும் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது” என்றார் பெருமிதத்தோடு.
இதே தகவலை மதுரை நகரத் தெருப் பெயர்கள் ஓர் ஆய்வு எனும் நூலை எழுதிய பசுமலை சிஎஸ்ஐ பள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியர் தேவராஜும் உறுதிப்படுத்துகிறார். இதன்மூலம் மொழி, இனம், சமூகப் பண்பாட்டு வரலாற்றில் தலைசிறந்து விளங்கும் மதுரையின் ஆங்கிலப் பெயர் குறித்த தேர்வில் 'ஆசியஜோதி' என்றழைக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேருவின் பங்கு இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிங்க:'நிற்க அதற்கு தக' - குறளாய் எதிரொலிக்கும் நேத்ராவின் குரல்