"தமிழர்களின் ஆன்மீகமும், கலாச்சாரமும் மிகவும் பிடிக்கும்" - ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் மதுரை:தமிழ்நாட்டில் பொதுவாகவே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவது வழக்கம், அது வெளி மாநிலங்களாக இருந்தாலும் சரி, வெளி நாட்டவர்களாக இருந்தாலும் சரி. ஏனென்றால் பழங்காலத்தில் இருந்து கட்டப்பட்ட ஆன்மீக கோயில்களும், கட்டடங்களும் அவர்களை வெகுவாக ஈர்க்கும் என்பதே அதன் காரணம். மேலும் தமிழ்நாட்டில் மூன்றில் இரண்டு சுற்றுலா தளங்கள் கோயில்களாகவே காணப்படுகின்றன. அவ்வாறு தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளின் விருப்ப பட்டியலில் மதுரை முக்கிய இடம் வகிக்கும்.
இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 40 ஆன்மீக அன்பர்கள் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா பயணம் வந்துள்ளனர். அவர்களின் நோக்கம் தமிழ்நாட்டினுடைய ஆன்மீக கலாச்சார பண்பாடுகளை அறிந்து அதனை ஜப்பான் நாட்டிற்குக் கொண்டு சென்று பரப்புவது ஆகும்.
தமிழ்நாட்டுச் சுற்றுலா பயணத்தின் தொடர்ச்சியாக இன்று மதுரை மாவட்டம் அழகர் மலையில் அமைந்துள்ள பழமுதிர்சோலை முருகன் திருக்கோயிலுக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு திருக்கோயிலின் சார்பாக சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் திருக்கோயிலின் வரலாறு, பூஜை முறைகள், திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. மிகவும் மனம் உருகி பழமுதிர்சோலை முருகன் கோயிலிலும், கள்ளழகர் கோயிலிலும் வேண்டி ஜப்பான் சுற்றுலாப் பயணிகள் வழிபட்டனர்.
இதையும் படிங்க: "இங்க பாருங்க.. அவர் சிலையே அவரே பாக்குறாரு" - ஏவிஎம் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த்!
அப்போது ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், “தமிழர்களின் கலை கலாச்சார அடையாளங்கள் ஜப்பானியர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. ஆகையால், அவை குறித்து மேலும் அறிந்து கொள்வதற்காகவே நாங்கள் தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளோம்.
வரலாற்று சிறப்புமிக்க மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது நாங்கள் அறிந்த அனுபவத்தை எங்களது நாட்டில் உள்ள நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார ஆன்மீக பரிவர்த்தனைகள் நடைபெற வாய்ப்பு உண்டு" என்றனர்.
அதைத் தொடர்ந்து கள்ளழகர் திருக்கோயிலில் உள்ள மண்டபங்களில் வடிக்கப்பட்டு இருக்கும் கலை சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர். அவை குறித்து கோயில் ஊழியர்களிடம் கேட்டு அறிந்து கொண்டனர். குறிப்பாகக் கோயில் கட்டிடக்கலை அவர்களை வெகுவாக ஈர்க்கின்றது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களுக்கும் ஜப்பானியர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் ஜப்பானில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த 40 பேரும் ஒரே குழுவாக அழகர் கோயிலுக்கு வருகை தந்தது பிற பக்தர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "இலவச வீட்டு மனை பட்டாவிற்கு நிலம் அளக்கவில்லை"- மாஜி எம்எல்ஏ பரபரப்பு புகார்!