மதுரை:தைத்திருநாளை முன்னிட்டு அவனியாபுரம் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், கரோனா தொற்றின் காரணமாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மாடுபிடி வீரர்களும் காளைகளும் தங்களது பெயர்களை இன்று மாலை 3 மணி தொடங்கி நாளை மாலை 5 மணி வரை ஆன்லைன் வழியாகப் பதிவுசெய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இணையவழி ஏற்கத்தக்கதல்ல
இந்நிலையில், மாடுபிடி வீரர்களும் காளை மாட்டின் உரிமையாளர்களும் இந்த முறைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ”இணையம் வழியாகப் பதிவுசெய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
மேலும் இதுபோன்ற நவீனத் தொடர்பு முறைகளில் மாடுபிடி வீரர்களுக்கும் அல்லது காளை மாட்டின் உரிமையாளர்களுக்கும் அவ்வளவாக அறிமுகம் இல்லாத நிலையில், இணைய வழியாகப் பதிவுசெய்ய மாவட்ட நிர்வாகம் வலியுறுத்துவது ஏற்கத்தக்கதல்ல.
அதுமட்டுமன்றி இதுபோன்ற அறிவிப்பால் அனுபவமில்லாத இளைஞர்களும் ஆர்வக்கோளாறு காரணமாக இணைய வழியில் தங்களது பெயரைப் பதிவுசெய்ய வாய்ப்பு உள்ளது. அதற்கு என்ன மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ள முடியும்?