மதுரை:பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
ஆன் லைன் மூலமாகப் பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், போட்டியில் பங்கேற்றுள்ளனர். 700 காளைகளும் பங்கேற்றுள்ளன. மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கரோனா தொற்று சான்றிதழ் கட்டாயம், போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளக் கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான அனுமதிச்சீட்டுடன் ஒரு உதவியாளர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காளை வெளியேறக்கூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பிவிடப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் 8 அடி உயரத்திற்குப் பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டி முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெறுகிறது.