தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் நடும் விழா.. விறுவிறுப்படையும் முன்னேற்பாடு பணிகள்! - Madurai Collector

Minister Moorthy: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் நடும் விழாவில் பங்கேற்ற பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அலங்காநல்லூர் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் தொடக்க விழா நாள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் நடும் விழா.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் நடும் விழா.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 3:16 PM IST

மதுரை:தமிழருக்கே உரித்தான பண்டிகையான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து, பொங்கல் பண்டிகையின் சிறப்பம்சமான மதுரை ஜல்லிக்கட்டு விழாவிற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஜன 15 மற்றும் 17ஆம் தேதிகளில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான கால்கோள் நடும் விழா இன்று (ஜன.8) நடைபெற்றது.

அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் நடும் விழாவில் மதுரை கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவும், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி பங்கேற்று, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான பணிகளைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வருடந்தோறும் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அதே போல், 2024ஆம் ஆண்டும் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியினை சிறப்பாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டு உள்ளது. அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் ஜன - 15ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்றும், பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடலில் 16ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) அன்றும், அலங்காநல்லூர் கோட்டை முனிவாசல் மந்தை திடலில் 17ஆம் தேதி (புதன் கிழமை) அன்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

வருடந்தோறும் பாரம்பரியமாக நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி. இந்த வருடமும் சிறப்பாக நடத்துவதற்கு முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், இன்று (ஜன.8) அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான கால்கோள் நடும் விழா தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. தமிழக முதலமைச்சர் தமிழர்களின் உணர்வை, பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் வகையில் ஆட்சி செய்து வருகிறார்.

ஜல்லிக்கட்டுப் போட்டியினை நடத்துவதற்கென்று அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கினை வருகின்ற ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் ஏதாவதொரு தேதியில் தமிழ்நாடு முதலமைச்சர் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைப்பார். அலங்காநல்லூர் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் தொடக்க விழா நாள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்” என்றார்.

இந்த நிகழ்வுகளின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), சேடபட்டி மு.மணிமாறன், துணை மேயர் தி.நாகராஜன், அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மதுரை திறப்பு விழா காணும் முன்பே சர்ச்சைக்குள்ளாகும் ஜல்லிக்கட்டு அரங்கு.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details