மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேவுள்ளது, பெருங்காமநல்லூர். பிரிட்டிஷ் ஆட்சியில் குறிப்பிட்ட சில சமூக மக்களை ஒடுக்குவதற்காக குற்றப்பழங்குடி அல்லது குற்றப்பரம்பரை சட்டத்தைக் கொண்டு வந்து, அதனை அமல்படுத்துவதற்கு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். ஆனால், இந்தச் சட்டத்தை ஏற்கமாட்டோம் என ஒன்று திரண்டு வெள்ளையர்களின் காவல்துறையை கடுமையாக எதிர்த்தவர்கள்தான், பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பிரமலைக்கள்ளர் சமூகத்தார்.
1920ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் ஊரைச் சுற்றி வளைத்த ஆங்கிலேயக் காவல்துறையை எதிர்த்து வேல் கம்பு, ஈட்டி, ஏர் கலப்பை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு சண்டையிட வந்த மக்களை கண்மூடித்தனமாகச் சுட்டு அழிக்க முடியாத வரலாற்றுத்தடத்தை வெள்ளையர்கள் ஏற்படுத்திச்சென்றனர்.
இன்றைக்கு 103 ஆண்டுகளைக் கடந்து விட்டாலும், இன்றைக்கும்கூட அதன் வரலாற்றுச்சுவடுகளை பெருங்காமநல்லூர் சுமந்து கொண்டிருக்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவிலும் தங்களுக்கான அங்கீகாரம் இல்லாத வேதனையும் நீரு பூத்த நெருப்பாக கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் இந்த வீர வரலாறு பள்ளிப் பாடத்திட்டத்தில்கூட இடம் பெறவில்லை என்ற வேதனையும், வலியும் அந்த மக்களிடம் நிறைந்துகிடப்பதைக் காண முடிகிறது.
பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் மகளிர் நலச்சங்கத்தின் தலைவர் செல்வ பிரீதா கூறுகையில், ''இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் நேரடி தொடர்புடைய ஊர், பெருங்காமநல்லூர். கடந்த 1871ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் அரசு குற்றப்பழங்குடி அல்லது குற்றப்பரம்பரை சட்டத்தைக்கொண்டு வந்தது. இந்தியாவில் வாழ்ந்த சில குறிப்பிட்ட பூர்வகுடி மக்களை குற்றப்பழங்குடிகள் என்ற பெயரால் குறிப்பிட்ட சில போர்க்குடி சமூகங்களை ஒடுக்குவதற்கு, இந்தியாவைக் கொள்ளையடிக்க வந்த வெள்ளைக்கூட்டம் சட்டம் கொண்டு வந்ததுதான் ஆகப்பெரும் கொடுமை.
குற்றப்பழங்குடி என்று அறிவிக்கப்பட்ட சமூகம் இந்திய ஒன்றியம் முழுக்க 20 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஆனால் விடுதலை பெற்ற இந்தியாவிலும்கூட இச்சமூக மக்கள் குற்றவாளிகளாக பார்க்கப்படுவதுதான் மிகப்பெரும் வேதனை. வெள்ளையர் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்துப் போராடிய, இப்போராட்டம் குறித்து பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் கூட இடம்பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
வடஇந்தியாவில் முதல்முதலாக கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் கடந்த 1911ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்திற்கும் அமுல்படுத்தப்பட்டது. 1914ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியில்தான் முதன் முதலாக இச்சட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஏறக்குறைய இப்பகுதியிலிருந்த 68 சமூகத்தார் இச்சட்டத்தின் வாயிலாக குறி வைக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சமூகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.
அடுத்தடுத்த பகுதிகளுக்கும் இதனைக்கொண்டு வரும்போதுதான், எங்கள் பகுதியில் அன்றைக்கிருந்த எட்டு நாட்டு பிரமலைக்கள்ளர் சமூகங்கள் ஒருங்கிணைந்து, இந்த சட்டத்திற்கு நாங்கள் அடிபணியமாட்டோம் எனத் தீர்மானம் இயற்றின. அன்றைய காலகட்டத்தில் இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரையறைகளில் எங்களுக்கு எதுவும் பொருந்தாத நிலையில், போர்க்குடி சமூகமாக பிரமலைக்கள்ளர் மீது வெள்ளையர்கள் நெருக்குதல் காட்டினார்கள். விவசாயம் செய்தாலும் காவல் பணியே எங்களுக்கு முதன்மையாக இருந்தது'' என்கிறார்.
பணியமாட்டோம் என தீர்மானம் இயற்றிய பின்னரும்கூட, பிரிட்டிஷ் அரசு அச்சட்டத்தைச் செயல்படுத்த தீவிர முனைப்புக் காட்டியது. பெருங்காமநல்லூர் மக்கள் எப்போது வேண்டுமானாலும் தாங்கள் தாக்கப்படலாம் என்ற எச்சரிக்கையோடு இருந்தபோதுதான் கடந்த 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் நாள் பிரிட்டிஷ் காவல்படை துப்பாக்கிகளோடு பெருங்காமநல்லூரை சுற்றி வளைத்தது. இதற்காக எங்கும் ஓடி ஒளியாத இந்த மக்கள், தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சிறிய போருக்குத் தயாராய் முன்னேறி வந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக எச்சரிக்கைகூட விடுக்காமல் மார்பு, தலை, முகத்துக்கு நேராக சுடத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில், பிறமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 15 ஆண்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். வீழ்ந்த கிடந்த ஆண்களுக்கு தண்ணீர் புகட்ட வந்தார் என்று கூறி, மாயக்காள் என்ற பெண்ணையும் துப்பாக்கி முனையால் குத்திக் கிழித்தனர். ஆனாலும் விடாமல் அவர் போராடினார். படுகாயமடைந்த அவர் ஏப்ரல் 5ஆம் நாள் உயிரிழந்தார். இந்த நிகழ்வில் உயிரிழந்த ஒரே பெண், மாயக்காள். சுடப்பட்டு இறந்த அந்த வயல்வெளிப் பகுதியிலேயே இறந்தவர்கள் அனைவரையும் ஊர் மக்கள் தகனர் செய்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பெரிய கருப்பத்தேவரின் கொள்ளுப்பேரன் முத்தையாகூறுகையில், ''இந்த சம்பவம் நடைபெற்றதற்குப் பிறகு இங்குள்ள மக்களின் கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றம் கருதி இருபாலர் பள்ளி, தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் விடுதிகள் திறக்கப்பட்டன. மேலும் டிஎன்டி, டிஎன்சி என்ற பெயரால் தனிச்சலுகைகள் தனி ஆட்சியர் மூலமாக வழங்கப்பட்டன. அந்த சலுகைகளை அனுபவித்தவன் நான். ஆனால், கடந்த 1979ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது இந்த சலுகையை நீக்கிவிட்டார்கள். இழந்த சலுகைகளை மீட்பதற்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். எந்த தமிழக அரசும் எங்கள் கோரிக்கைகளை கேட்கத் தயாராக இல்லை'' என்கிறார்.