தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் "மோடி விவசாய நண்பன்" என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த பாஜகவைச் சேர்ந்த குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு குஷ்பு பதிலளித்தார்.
முதலமைச்சர் வேட்பாளரால் அதிமுக, பாஜக கூட்டணி பிளவு ஏற்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இரு கட்சித் தலைவர்களும் பேசிக்கொள்கிறார்கள், நடுவில் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி பற்றிய முடிவுகளை தலைவர்கள்தான் முடிவுசெய்வார்கள்" எனத் தெரிவித்தார்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என கமல்ஹாசன் கூறியது குறித்த கேள்விக்கு, நல்லதுதான், மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அதை வரவேற்போம் என்றார்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு தடுக்கிறது என விவசாய சங்கம் குற்றஞ்சாட்டுவது குறித்த கேள்விக்கு, "விவசாய சங்கங்கள் போராடுவது வட மாநிலங்களில் மட்டுமே. இந்தியாவில் மொத்தம் 70 விழுக்காடு விவசாயிகள் உள்ளனர். ஆனால், பஞ்சாப், ஹரியானா மாநிலங்கலில் மட்டுமே விவசாயிகள் பிரச்சினை உள்ளது.
குஷ்பூ செய்தியாளர் சந்திப்பு தமிழ்நாட்டில், நடக்கும் அனைத்துப் போராட்டங்களும் எதிர்க்கட்சிகளின் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் செய்யப்பட்டு, விவசாயிகளை திசைதிருப்பி மாற்று வழியில் கொண்டுபோவதற்கான வேலை நடக்கிறது" என விமர்சித்தார்.
ரஜினி கட்சி ஆரம்பித்து பிஜேபியில் இணைவாரா என்ற கேள்விக்கு, முதலில் 31ஆம் தேதி ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் அதற்குப் பிறகு பேசுவோம் என்றார்.
குஷ்பூ செய்தியாளர் சந்திப்பு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆண்டுதோறும் பொங்கல் பரிசு கொடுப்பதுதான் இதில் புதிது ஏதுமில்லை. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வது சரியானதல்ல.
கிறிஸ்தவர்கள் புனித யாத்திரை பயணத்திற்காக தமிழ்நாடு அரசு வழங்கிவரும் ஊக்கத்தொகையை 20 ஆயிரத்திலிருந்து 37 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இதனைப் பற்றி பேச எதிர்க்கட்சி தயக்கம் காட்டுவது ஏன்?" எனக் கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, கரோனா காலத்தில் கொடுக்காத 2500 ரூபாயை தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் கொடுக்கிறாரா என்ற கேள்விக்கு, "தமிழ்நாட்டில் கரோனா பேரிடர் காலங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்குவது தவறல்ல" எனக் கூறினார்.