ஈரோடு: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் இஸ்லாமிய அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்திய காவல் துறையினை கண்டித்து ஈரோட்டில் போராட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் எஸ்டிபிஐ, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரையில் வில்லாபுரம் பகுதியில் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் தீடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அமைதி வழியில் சென்னையில் நடத்திய போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டததை கண்டித்து இரவு நேரத்திலும் பெண்கள் கை குழந்தைகளோடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.