மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், நற்பவளக்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நற்பவளக்குடி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு 6,750 என்ற எண் கொண்ட மதுபானக்கடையை அரசு திறந்துள்ளது. இந்த மதுபானக்கடை தற்போது மாற்றப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் கல்வி நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு மது அருந்த வருபவர்கள், மது குடித்துவிட்டு பாட்டில்களை கல்வி நிலையங்களில் போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால், மாணவ - மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்த மதுக்கடையால் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மதுபானக் கடையை அகற்ற கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நற்பவளக்குடி கிராமத்தில் இடம் மாற்றப்பட்டுள்ள 6,750 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடையை செயல்படத் தடை விதிக்கவும், இக்கடையை வேறு இடத்திற்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று(ஏப்.3) நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கல்வி நிறுவனம் அருகில் புதிய மதுபானக் கடை எவ்வாறு அமைக்கப்பட்டது? எனக் கேள்வி எழுப்பினர். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ''கல்வி நிறுவனம் செயல்படாமல் உள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், ''கல்வி நிறுவனம் அருகில் மதுபானக் கடை அமைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதா?’’ என கேள்வி எழுப்பினர்.