தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வருவாய்க்கு மதுபானக் கடைகள் மட்டுமே வழியா? வலுக்கும் டாஸ்மாக் எதிர்ப்பு - அதிமுக அரசு

பெருந்தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் வலுவடையத் தொடங்கி உள்ளன. மதுக்கடைகளை தொடர்ந்து நடத்துவதற்கு அரசு சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. வருமானத்திற்கு மாற்று வழியை அரசுதேட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

வலுக்கும் டாஸ்மாக் எதிர்ப்பலை
வலுக்கும் டாஸ்மாக் எதிர்ப்பலை

By

Published : Jul 14, 2021, 5:09 PM IST

Updated : Jul 17, 2021, 7:36 PM IST

பெருந்தொற்றுக்கு முந்தைய பண்டிகை காலங்களில், இரண்டு சம்பவங்கள் பற்றிய செய்திகள், தலைப்புச் செய்திக்கு நிகராக செய்திகளில் அடிபடும்.

அந்த பண்டிகைக்கு வெளியான நட்சத்திர நாயகர்களின் திரைப்படத்தின் முதல் நாள் வசூலும், பண்டிகை நாளின் டாஸ்மாக் கடைகளின் மொத்த வசூலுமே அவை. சந்தேகம் இல்லாமல் டாஸ்மாக் வசூலிடம், நட்சத்திர நாயகர் தோற்றிருப்பார்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கும் விற்பனையும்

சுதந்திரத்திற்கு முந்தைய கடந்த 1937ஆம் ஆண்டில் இருந்து, 2001ஆம் ஆண்டு வரை குறிப்பிட்ட சில காலங்களைத் தவிர, தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது. கள்ளச்சாராய பெருக்கம், அதனால் அதிகரித்த மரணங்கள் போன்றவைகளை காரணம் காட்டி மதுவிலக்கு திரும்பப் பெறப்பட்டது.

அதேபோல, 1983ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசின் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் மதுபான வகைகளின் மொத்த விற்பனைக்காக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தை (TASMAC) தொடங்கினார்.

கள்ளச்சாராய மரணங்கள், மதுக்கடை விற்பனையாளர்களின் ஒழுங்கின்மை, தில்லு முல்லு உள்ளிட்ட காரணங்களால் 2003ஆம் ஆண்டில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மதுபானங்களின் விற்பனையை டாஸ்மாக் மூலம் அரசே மேற்கொள்ள வழிவகை செய்தார்.

அரசின் இந்த நடவடிக்கையை அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி எதிர்த்தாலும், டாஸ்மாக் ஈட்டித் தந்த அதிக வருமானத்தால், அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதியும் அமைதியாகி போனார். அதிலிருந்து அரசின் பிரதான வருவாய் காரணியாக மாறிப்போனது டாஸ்மாக். இதனிடையே 2002ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர் செல்வம், கள்ளச்சாராய மரணங்களைத் தடுப்பதற்காக கூறி மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்திய நிகழ்வும் தமிழ்நாட்டில் அரங்கேறியது.

கரோனா தொற்றும் டாஸ்மாக் கடைகளும்

மதுபானக் கடைகளுக்கு எதிரான தமிழ்நாட்டின் போராட்ட வரலாறு மிக நீண்டது. கடந்த 2015ஆம் ஆண்டு, டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, அலைபேசி கோபுரம் மீது ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்திற்கு பின்னர் தீவிரமடைந்தது. அந்த எதிர்ப்பலை இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் மேலும் தீவிரமடைந்து மதுபான கடைகளுக்கு எதிரான பெருங்குரலாக ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

கரோனா பெருந்தொற்றின் முதல் அலை காரணமாக, 2020 மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. வேலையிழப்பு, வருமானம் இழப்பு என மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், டீ கடைகளைக் கூட திறக்க தடைவித்திருந்த, அப்போதிருந்த அதிமுக அரசு வருமான இழப்பைக் காரணம் காட்டி, டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்து. பெருந்தொற்று பரவாமல் தடுக்க, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வயது வாரியாக வண்ண வண்ண டோக்கன்கள் வழங்கப்பட்டு விற்பனை ஒழுங்குபடுத்தப்பட்டது.

அதிமுக அரசின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி, பொதுமக்களுடன் சேர்ந்து கைகளில் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், அடுத்து தான் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அரசின் வருமானத்தை காரணம் காட்டி இரண்டாம் அலை ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்தார்.

மதுக்கடைகள் தான் வருமானத்திற்கு வழியா?

தமிழ்நாட்டில் யார் முதலில் மதுவிலக்கைக் கொண்டு வந்தார்கள் என தகராறில் ஈடுபடும் அரசுகள், யார் முதலில் கடைகளை மூடுவதில் என்பதில் மட்டும் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றன. அதற்கு ஆட்சியாளர்கள் கூறும் காரணங்கள் மூன்று. அரசின் வருமானம், கள்ளச்சாராயம் பெருகும், மதுப்பிரியர்கள் அண்டை மாநிலத்திற்கு படையெடுப்பார்கள் என்பதே அவை.

அரசின் இந்த வார்த்தைகள் எல்லாம் போலியே என்கிறார் மகளிர் ஆயத்தின் மதுரை மாவட்ட அமைப்பாளர் இளமதி. "தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என, மகளிர் ஆயம் 15 ஆண்டுகளாக போரட்டம் நடத்தி வருகிறது. பெருந்தொற்று அபாயம் இன்னும் முடிவடையாத நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்திருப்பது வேதனைக்குரியது. கள்ளச்சாராயம் பெருகும், அண்டை மாநிலங்களுக்கு படையெடுப்பார்கள், வருமானத்திற்கு வழியில்லை என்ற காரணங்களால் அரசு இதனை அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பான காவல் படையைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, கள்ளச்சாராயம் பெருகும் எனக் காரணம் சொல்வது வேதனைக்குரியது. எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தி மதுவாங்குவதற்காக அண்டைமாநிலங்களுக்கு செல்வோரைத் தடுக்க முடியும். பெருந்தொற்று காலத்தில் அது சாத்தியமாகியும் இருக்கிறது.

அரசு வருவாய்க்கு மதுபானக் கடைகள் மட்டுமே வழியா

அரசுக்கு வருமானம் ஈட்ட நிறைய வழிகள் உள்ளன. குறிப்பாக பால் வளம் சார்ந்த பொருட்களின் உற்பத்தியில், ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட முடியும். அதனை அரசே முழுமையாக ஏற்று நடத்தினால் இது சாத்தியம். அதேபோல ஜிஎஸ்டி வரியின் மாநில அரசின் பங்கினை மத்திய அரசிடமிருந்து பெற்றால் மாநில அரசின் வருமானம் அதிகரிக்கும்" என்றார்.

ஊரடங்கு காலத்தில், மதுமபானக் கடைகளை அதிமுக அரசு திறந்த காரணத்தால் மக்கள் அந்த அரசை தோற்கடித்தனர். திமுக இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நந்தினி ஆனந்த். "டாஸ்மாக் கடைகள் திறப்பு என்ற முடிவின் மூலம் தமிழ்நாட்டை குற்றவாளிகளின் பூமியாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். ஆனால் சாராய ஆலை அதிபர்களுக்கு சாதகமாக அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழ்நாடு மக்களின் நலன் கருதி, திமுக உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்" என்றார்.

மக்கள் நலனே முக்கியம் எனக் கூறும் அரசுகள், வருமானத்தை காரணம் காட்டி மதுபானக் கடைகளை தொடர்ந்து நடத்துவதை நிறுத்திக்கொண்டு, மக்களின் வயிற்றில் அடித்து ஈட்டும் வருமானத்திற்கு மாற்று வழி தேட வேண்டிய நேரம் இது. மதுபானக்கடைக்கு எதிராக ஒலிக்கத் தொடங்கி இருக்கும் கலகக் குரல்கள், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலாக மாறி, டாஸ்மாக் விஷயத்தில் தடுமாறிக் கொண்டிருக்கும் அரசுகளின் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...

இதையும் படிங்க:ஒரு பக்கம் கல்வி, மறுபக்கம் சமூகப் பொறுப்பு - அரசுப்பள்ளி ஆசிரியையின் சமூக அக்கறை

Last Updated : Jul 17, 2021, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details