இந்தியா முழுவதும் கரோனா பரவல் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டோர் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டுவருகின்றனர். இதில், மறைமுக கதாநாயகர்களாக இறுதிச் சடங்கு செய்யும் ஊழியர்களும், கரோனா பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுபவர்களும் களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், மதுரையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதி முதல் அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் உணவு கொடுக்கும் பணி தொடங்கியது. இந்த மாவட்டத்தில் நான்கு இடங்களில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களுக்கு மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவினை மேற்கண்ட சாரிடபிள் டிரஸ்ட் வழங்கிவருகிறது.
இந்த உணவு அனைத்தும் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்க வளாகத்தில் இருக்கும் அம்மா கிச்சனில் தயார் செய்யப்பட்டுவருகிறது. அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கருவூரார் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை, வேளாண்மை கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தொப்பூர் மருத்துவமனை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து கரோனா நல மையங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
உணவு விவரங்கள்
- காலை 11 மணிக்கு காய்கறி சூப் மற்றும் பாசிப்பருப்பு, மாலை 4 மணிக்கு இஞ்சி டீ, சுண்டல் ஆகியவை வழங்கப்படும்.
- காலையில் வழங்கப்படும் உணவில் கேசரி, பொங்கல் அல்லது கிச்சடி, ஊத்தாப்பம், இட்லி, வடை, முட்டை, மிளகுப் பால், இரண்டு வகை சட்னி மற்றும் சாம்பார் போன்றவை வழங்கப்படும்.
- மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், புளிக்குழம்பு, மோர், சப்பாத்தி, பருப்பு டால், இரண்டு வகை காய்கறிகள், முட்டை, அப்பளம், ஊறுகாய் ஆகியவை வழங்கப்படும்.
- இரவு உணவில் இட்லி, தோசை, கிச்சடி, சப்பாத்தி, இரண்டு வகை சட்னி, சாம்பார், குருமா மற்றும் மிளகு பால் ஆகியவை வழங்கப்பட்டு வழங்கப்படும்.
இது குறித்து தமிழ்நாடு வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “உணவே மருந்து என்ற அடிப்படையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூன்று வேளை, உணவு இரண்டு வேளை சிற்றுண்டி என ஐந்து வேளைகள் தரமான உணவு அம்மா கிச்சன் மூலமாக கடந்த 55 நாட்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையோடும், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து இந்த பணியை செய்து வருகின்றன. ஏறத்தாழ நாளொன்றுக்கு நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்மா கிச்சன் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் இரண்டு சுழற்சியில் சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் பணிபுரிந்து வருகின்றனர்”என்றார்.
கடைசி நோய் தொற்றாளர்கள் இருக்கும் வரை இந்த பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். தேவையான நேரத்தில், தேவையான அளவு சுகாதாரமான சத்தான உணவுகளை தொடர்ந்து வழங்குவது மதுரை மக்களை விரைந்து கரோனாவிலிருந்து மீட்டு வருகிறது. குறிப்பாக, உணவு தயாரிக்கும் இடத்தில் உரிய இடைவெளியும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
கரோனாவிலிருந்து மீள இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், சத்தான உணவும், முறையான கவனிப்பும் அதற்கு அடிப்படைத் தேவையாக இருக்கிறது. அதனை மதுரை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு அம்மா சாரிடபிள் டிரஸ்ட் செய்துவருகிறது. மேலும், சென்னை கரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவுகள் அனைத்தும் வெள்ளை நிற பிளாஸ்டிக் காம்போ பாக்ஸில் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்த டீ, அதனைக் குடிக்க மெழுகு தடவப்பட்ட பேப்பர் கப் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு சில நாள்கள் தவிர்த்து மற்ற நாள்களில், காலை வேளையில் மட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது உணவிலும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. பிற மாவட்டங்களில் நிலைமை இப்படியிருக்க மதுரையில், கரோனா நோயாளிகளுக்கு வாழை இலையில் உணவை வைத்து அலுமினியம் பாயில் பேப்பரால் பார்சல் செய்து வழங்குகின்றனர்.
மதுரையில் கரோனா நோயாளிகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா? மதுரையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரிப்புக்கு உணவும் காரணமா? என எழுப்பட்ட கேள்விக்கு ”கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மதுரையில் கரோனா தொற்றின் வேகம் 20 விழுக்காட்டிற்கு மேலாக இருந்தது. தற்போது நோய்த்தொற்றின் வேகம் 2.5 விழுக்காட்டிற்கு கீழ் குறைந்துள்ளது. 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 38 பேருக்கு மட்டும்தான் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இது 1.5 விழுக்காட்டுக்கும் குறைவானதாகும். இதில், உணவின் பங்களிப்பு அதிகம். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இனியும் உணவு வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க:ஊரடங்கிலும் உணவு வழங்கும் அம்மா உணவகம்