தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவப் படிப்புகளுக்கான ஓபிசி இடஒதுக்கீட்டில் விதிமீறல் - சு. வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

மருத்துவக்கல்வி மாணவர் அனுமதிக்கு ஒன்றிய அரசு இடங்களில் இட ஒதுக்கீடு மீறல் நடந்திருப்பதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டினார்.

மருத்துவ படிப்புகளுக்கான ஓபிசி இட ஒதுக்கீட்டில் விதிமீறல்
மருத்துவ படிப்புகளுக்கான ஓபிசி இட ஒதுக்கீட்டில் விதிமீறல்

By

Published : Oct 20, 2022, 4:33 PM IST

மதுரை: நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 'அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான (AIQ) ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் (Open Competition) இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே. அதாவது பொதுப்போட்டியில் அனுமதி பெறுகிற ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் கழிக்கப்படமாட்டார்கள். இது இடஒதுக்கீடு கோட்பாட்டின் அடிச்சுவடி. உச்சநீதி மன்ற தீர்ப்புகள், அரசின் வழி காட்டல்கள் பல முறை தெளிவுபடுத்தப்பட்ட வழி முறை இது.

ஆனால், மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு அகில இந்திய இடங்களுக்கான அனுமதியில் இந்த கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது எனத்தெரிகிறது. ஓபிசி மருத்துவ இளங்கலை இட ஒதுக்கீடு இடங்கள் 2169. நிரப்பப்பட்ட ஓபிசி இடங்களோ ஆறு மட்டுமே. பொதுப்போட்டியில் தேர்வான 2163 ஓ.பி.சி மாணவர் எண்ணிக்கை, இட ஒதுக்கீடு அனுமதியாக கணக்கு வைக்கப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சர் மாண்புமிகு மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட மொத்த மருத்துவ இளங்கலைப் பட்ட காலியிடங்கள் எவ்வளவு ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை பிரிவு வாரியாக விவரங்கள் வெளியிட வேண்டும்.

பொதுப்போட்டியில் தேர்வான ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக என்ன? ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு வாயிலாக அனுமதிக்கப்பட்டு இருப்பவர்கள் (பொதுப் போட்டியில் இடம் பெற்ற இப்பிரிவினர் நீங்கலாக) பிரிவு வாரி எவ்வளவு? பொதுப்போட்டியின் வாயிலாக அனுமதி பெற்ற ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள், ஓ.பி.சி,எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எண்ணிக்கை கணக்கிலும் சேர்க்கப்பட்டு உள்ளனரா? ஆம். எனில் எத்தனை என்பதை பற்றி முழு விவரங்களை வெளியிடுமாறு கோரியுள்ளேன்.

இட ஒதுக்கீடு மீறல் நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட, அனுமதி மறுக்கப்பட்ட ஓ. பி. சி மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மாணவர் அனுமதியிலும் இக்கோட்பாடு மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மருத்துவக் கல்வி அனுமதிகளில் ஓ. பி. சி இட ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசால் மறுக்கப்பட்டு போராடி, நீதிமன்றங்களில் வாதாடி பெறப்பட்ட ஒன்று. அதில் தமிழ்நாடு முன்னின்றது. ஆனால் இன்றும் அதை சிதைக்கிற முயற்சிகள் தொடர்கின்றன. இதை அனுமதிக்க இயலாது’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேவரின் தங்கக்கவசம் - நீதிமன்றத்தில் மல்லுக்கட்டும் அதிமுக

ABOUT THE AUTHOR

...view details