மதுரை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டி கிராமத்தில், தகுதி இல்லாத நபர்களுக்குப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஒதுக்கீடு செய்ததைக் கண்டறிய வருவாய்க் கோட்டாட்சியரின் கீழ் குழு அமைக்கக் கோரிய வழக்கில், உதவி திட்ட அலுவலரை விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசால் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி தற்போது மக்கள் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக வருவதற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பெறும் வகையில் விதிகள் உள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டி கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு இதுபோன்ற திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தகுதியானவர்களின் பெயர்களைக் கிராம சபை கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பெயரில் 47 பேர் கொண்ட விபரங்கள் கொண்ட விண்ணப்பங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.