மதுரை:தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வர்த்தகப் பிரிவும் இணைந்து, அமெரிக்காவுடன் தொழில் வணிகம் செய்வது எப்படி என்ற தலைப்பில் ஓர் கலந்தாய்வுக் கூட்டம், சங்கத் தலைவர் டாக்டர் N. ஜெகதீசன் தலைமையில் மதுரையில் நடைபெற்றது.
இதில் வரவேற்புரையாற்றிய முனைவர் என்.ஜெகதீசன், “சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக வர்த்தகப்பிரிவு அதிகாரிகளுடன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பல ஆண்டுகளாக நல்லுறவு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், 2013ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு தொழில், வணிகம் சார்ந்த 45 வணிகப் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் தூதுக் குழுவினை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பல்வேறு வணிக வாய்ப்புகளை அறிந்து வந்தனர்.
அத்துடன் இருதரப்பு வர்த்தக வாய்ப்புகளை உறுதிபடுத்திடும் வகையில், இந்திய - அமெரிக்க தொழில் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மேற்கொண்டது. மேலும், இந்தியா - அமெரிக்கா வணிகப் பொருட்களின் இருதரப்பு வர்த்தகம் கடந்த 2022ஆம் ஆண்டில் 123.48 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், அது நடப்பு ஆண்டில் 128.78 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இருதரப்பு வர்த்தகம் மென்மேலும் வளர்ச்சி பெறும். இந்தியாவிலிருந்து தோல் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உறைந்த இறைச்சி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள், ஜவுளி, ரத்தினங்கள், உலோகங்கள், விவசாய இயந்திரங்கள், இயந்திரங்களின் உதிரிப் பாகங்கள் அமெரிக்காவுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
பின்னர், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை அமெரிக்க தூதரகத்தின் முதன்மை வர்த்தகப் பிரிவு அதிகாரி கேரி அருண் பேசுகையில், “தமிழகத்தில் தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளோர், அமெரிக்காவில் பல்வேறு தொழில் வணிகங்களில் முதலீடு செய்து அங்கிருந்தவாறே வணிகத்தை மேம்படுத்த மற்றும் விரிவுபடுத்தும் முயற்சிகளுக்கு, சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வர்த்தகப் பிரிவு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது.