மதுரை மாவட்டம் மணிநகரத்தைச் சேர்ந்த பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி அண்மையில் ஐஏஎஸ் தேர்வில் நாட்டிலேயே 286ஆவது இடம் பெற்று சாதனை படைத்தார். அவரை ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் நல்லெண்ண தூதர் நேத்ரா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து மாணவி நேத்ரா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் தெரிவித்ததாவது, "ஐஏஎஸ் தேர்வில் பூரண சுந்தரியின் வெற்றி மதுரை மக்களுக்கு கிடைத்த பெருமையாகும். இவரின் வெற்றி என்னைப்போன்ற மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது என்பது எனது நோக்கமாக இருக்கின்ற காரணத்தால் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்தேன்" என்றார்.
பூரண சுந்தரியின் வெற்றி மதுரை மக்களுக்கு கிடைத்த பெருமை அவரைத் தொடர்ந்து பேசிய பூரண சுந்தரி ஐஏஎஸ், "கரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தன்னுடைய எதிர்கால சேமிப்பான ஐந்து லட்ச ரூபாயை செலவிட்ட நேத்ராவின் செயல் பாராட்டிற்குரியது. அந்த உதவியை தற்போது தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற நேத்ராவின் பணி போற்றுதலுக்குரியது. இன்றைய காலத்தில் ஐந்து ரூபாயை கூட அடுத்தவர்களுக்காக செலவு செய்கின்ற மனப்பக்குவம் உள்ளவர்களைக் காண்பது அரிது. மாணவி நேத்ராவின் ஐஏஎஸ் கனவு நிச்சயம் நிறைவேறும். அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடித்தட்டு மக்களின் குரல் ஐநாவில் எதிரொலிக்கும்' - நெகிழ்ச்சியில் நேத்ரா!