பொதுவாக தேவதைகள் வெள்ளை நிற ஆடையில்தான் இருப்பார்கள் என்பதை நாம் திரைப்படங்களின் மூலம் கண்டிருப்போம். அப்படி, கரோனா காலத்தில் உண்மையில் தேவதைகளாய் இருக்கிறார்கள் இந்த வெள்ளுடை அணிந்த தேவதைகள். வெண்மை உடை தரித்த தேவதைகளாய் வலம்வரும் செவிலியர், மனித குலத்தையே மீட்கவந்த அற்புத படைப்பு.
நோயுற்று விழுகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் அருகிலிருந்து சேவை செய்கின்ற மாற்று தாய்மார்கள் அவர்கள். இவர்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பில்தான் உலகத்தின் ஆன்மா உயிர் பெற்று நிற்கிறது என்றால் அது மிகையல்ல. ஆயிரம் மருந்துகள் செய்யாததை செவிலியரின் அன்பான சொல்லும், கருணைமிக்க செயலும் செய்துவிடும் என்பது மகத்தான உண்மை.
அதுமட்டுமின்றி, உலகில் எந்த சுகாதாரப் போர் வந்தாலும், இவர்கள்தான் அன்பெனும் ஆயுதத்துடன் எதிர்த்துப் போராடும் முதல் வீரர்கள். அதை நாம் இந்தக் கரோனா காலத்தில் உணர்ந்திருப்போம். கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று உலகமெல்லாம் காட்டுத்தீயாய் பரவி, ஒட்டுமொத்த நாடுகளையே முடக்கிவைத்திருக்கும் சூழலில் செவிலியர் மட்டுமே விழி மூடாது பணிசெய்து நோயாளிகளைக் காக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் ஒப்பற்ற பணியைப் போற்றும் வண்ணம், இந்திய நாடு ஹெலிகாப்டர் மூலமாக நாடு முழுவதும் அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் மலர்த்தூவி மரியாதை செலுத்தியது. வெள்ளுடை தேவைகளுக்கான தினமான இன்று உலகம் முழுவதும் செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.