மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனுவில், "இந்த வருடம் கரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஜல்லிக்கட்டு போட்டியானது மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கு உடற்தகுதி, கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இப்போட்டியில் 700 மாடுபிடி வீரர்கள், 900 காளைகள் பங்குபெற்றனர். ஒவ்வொரு சுற்றிலும் 75 வீரர்கள் வீதம் களம் இறக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது.
இப்போட்டியில், அதிகப்படியான மாடு பிடிக்கும் வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது, 2ஆவது பரிசாக இரண்டு பசு மாடுகள் வழங்கப்பட்டது, 3ஆவது பரிசாக தங்க நாணயம் வழங்கப்பட்டது. இதில், 33ஆவது பனியன் அணிந்த கண்ணன் என்பவர் முதல் பரிசினைப் பெற்றார். ஆனால், 33ஆவது பனியன் அணிந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் முதல் சுற்றில் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
அவரது 33ஆவது எண் பனியனை சட்டவிரோதமாக கரோனா தொற்று பரிசோதனை செய்யாமல் கண்ணன் என்பவர் அணிந்துகொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். மேலும் கண்ணன் என்பவருக்கு 2021 ஜனவரி 30ஆம் தேதி முதல் பரிசான காரினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கவுள்ளார். நடைபெற்ற முறைகேடு குறித்து பல்வேறு அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை.
எனவே ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முதல் பரிசினை வழங்க இடைக்காலத் தடைவிதிக்கவும், முறையான விசாரணை மேற்கொண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் பரிசினை வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் பனியன்கள் மாற்றி இரண்டு பேர் இணைந்து 12 காளைகள் பிடிக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசுபெற்ற கண்ணனுக்குப் பரிசு வழங்க இடைக்காலத் தடைவிதித்தும், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க:ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கோரி வழக்கு!