மதுரை உலக தமிழ் சங்கத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் இன்று (செப்.08) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவீந்திரநாத் குமார், மாணிக்கம் தாகூர், மதுரை ஆட்சியர் வினய் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது பேசிய ஆட்சியர் வினய், 'மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் பேர் போலியான கணக்கு மூலம் பிரதமரின் கிசான் திட்டத்தில் நிதியுதவி பெற்றுள்ளனர். அதில், ஆறாயிரம் பேரின் வங்கிக் கணக்கிலிருந்து நிதியுதவியாக வழங்கப்பட்ட 7 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணம் திரும்ப எடுக்கப்பட்டது. மேலும் பிரதமர் கிசான் திட்ட முறைகேடு குறித்து விசாரிக்க உயர் அலுவலர்கள் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்கு முழுமையான விசாரணை நடத்தப்பட்டு நிதியுதவி பணம் திரும்பப் பெறப்படும்' என தெரிவித்தார்.