மதுரை:கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் கடந்த மே 25ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதுடன், வாரண்ட் நகல், அரசு முத்திரைகள், வழக்கு தொடர்பான அரசு ஆவணங்கள் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, பென்டிரைவில் இருந்த தகவல்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆவணங்களை பறித்துச் சென்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்தனர். இதில் 15 பேர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர்.
இந்த ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என வருமான வரித்துறையின் உதவி இயக்குநர் யோக பிரியங்கா, கிருஷ்ணகாந்த், மற்றும் ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், “இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் உள்ளிட்ட நான்கு பேருக்கு கரூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கூறியிருந்தனர்.