மதுரை:100 உறுப்பினர்களைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் நேற்று நடைபெற்றக் கூட்டத்தில் வெறும் 13 உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மதுரை மாநகராட்சியின் 18ஆவது மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நேற்று மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க் அமைப்பதற்கு நிலம் ஒதுக்கீடு மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவு அமைப்பதற்கு நிலம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாமன்றத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாகவும், தெரு நாய்கள் அடிக்கடி பொதுமக்களை கடிப்பதாகவும், சாலைகளில் அதிகளவு மாடுகள் சுற்றித் திரிவதாகவும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு விபத்து ஏற்படும் ஆபத்து நிலவுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
மேலும் கால்நடைகள் மற்றும் நாய்களை விரைந்து பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பத்துக்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மேயரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் நடந்து முடிந்த மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு பாஸ் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு நபருக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் ஐந்து பாஸ் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.