மதுரை:தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டணிபட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் தன் வீட்டிற்கு கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக குழி தோண்டிய போது பெரிய பானை புதைந்திருந்தது கண்டறியப்பட்டது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கொடுத்த தகவலின்படி சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும், மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன், ஆய்வாளர் அனந்தகுமரன் ஆகியோர் அந்த பானையை ஆய்வு செய்தனர்.
அந்த குறிப்பிட்ட பானை பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி என கண்டறியப்பட்டது. உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி அய்யனார் பாண்டியராஜூக்கு தகவல் கொடுக்கப்பட்டு, நேரடியாக களத்திற்கு வந்து முதுமக்கள் தாழியை பாதுகாப்புடன் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து. முனீஸ்வரன் கூறியாதாவது, "இன்றைய தமிழ்ச் சமூகத்தில் இறப்பு சடங்கு முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக பெருங்கற்கால தொடக்கத்தில் இறந்தவர்களின் உடலை தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே மலைப்பகுதிகளிலும் காட்டுப் பகுதிகளிலும் போட்டுவிடுவார்கள்.
அதை நாய், நரி, கழுகு, பறவைகள், மிருகங்கள் இரையாக உண்ட பின்பு அங்கு கிடக்கும் எலும்புகளைச் சேகரித்து அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பானைகள், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி வீ (V) வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்துள்ளனர். பிற்காலத்தில் தான் மனிதன் இறந்த பிறகு உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து அவர்கள் நினைவாக புதைத்த முதுமக்கள் தாழியை சுற்றி கல் அடுக்குகள் வைத்துப் பாதுகாக்கும் வழக்கம் உருவானது.