மதுரை:தே. கல்லுப்பட்டி அருகே மோதகம் என்ற சுப்புலாபுரம் பகுதியில் சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. அதில் வரலாற்றுத்துறை கௌவர விரிவுரையாளரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, பாலகிருஷ்ணன், ஆய்வாளர் அனந்தகுமரன் ஆகியோர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சாலை ஓரம் தலைப்பகுதி உடைந்த நிலையில் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
அந்த கற்சிலையானது, கி.பி 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 800 ஆண்டு பழமையான கற்சிலை என தொல்லியல் கள ஆய்வாளர் கணிப்பின்படி கூறப்படுகிறது. இதுகுறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறுகையில், “பாண்டியர் காலத்தில் செங்குடிநாட்டின் எல்லைக்கு உட்பட்ட மோதகம் வேளாண்மை மற்றும் வணிகம் செய்வதில் சிறப்பு பெற்று விளங்கியது.
இவ்வூரில் பல வரலாற்றுத் தடயங்கள் புதைந்த நிலையில், மக்கள் வசிப்பிடம் இல்லாமல் அரசாங்க பதிவேட்டில் மட்டும் ஆவாரம்பட்டி, சுப்புலாபுரம், கரையாம்பட்டி, தாதமடம் போன்ற நான்கு கிராமத்திற்கு தாய் கிராமம் என்ற பெயரில் மோதகம் தற்போது உள்ளது.
இப்பகுதியில் தற்போது திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்குள்ள காவல்துறை சோதனைச்சாவடி அருகே மேற்கு திசையில் சாலை ஓரத்தில் தலைப்பகுதி உடைந்த நிலையில் லட்சுமி நாராயணன் கற்சிலை காணப்படுகிறது.
லட்சுமி நாராயணன் கற்சிற்பம்:இந்த கற்சிற்பம் குறித்து ஆய்வு செய்தபோது மூன்றடி உயரத்தில் தலைப்பகுதி முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. எஞ்சியவற்றை வைத்து பார்க்கும் போது இக்கற்சிலை லட்சுமி நாராயணர் சிற்பம் என்பது தெரியவந்தது.