மதுரை : பழங்காநத்தத்தைச் சேர்ந்த ஹாஜி முகம்மது இஸ்மாயில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ”மதுரை மாநகராட்சியில் நான் பில் கலெக்டராக கடந்த 1978ல் பணியில் சேர்ந்தேன். பின்னர் பதவி உயர்வுக்கான துறை ரீதியான தேர்வில் வெற்றி பெற்றேன்.
கடந்த 2010ல் உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. கடந்த 2013ல் ஓய்வு பெற்றேன். இந்நிலையில் 1992ல் சிவபாக்கியம் என்பவர் மதுரை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் ஆயாவாக நியமிக்கப்பட்டார். டைப்பிஸ்ட், உதவியாளர், கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கடந்த 2015ல் சட்ட அலுவலகராக நியமிக்கப்பட்டார்.
இதற்கு முறையான தடையின்மை சான்று பெறவில்லை. இவர், பெங்களூருவில் உள்ள சட்டக் கல்லூரியில் எல்எல்பி முடித்துள்ளார். இதற்காக மாநகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை. மாநகராட்சியில் பணியாற்றிய காலத்தில் எப்படி முழு நேர படிப்பை முடித்தார் எனத் தெரியவில்லை.