தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் மதுவுடன் கலப்படம்: 4 பேர் கைது - கள்ள சாராய வியாபாரம்

மதுரை: பேரையூர் அருகே டாஸ்மாக் மதுவுடன் கலப்படம்செய்து புதுவித மதுபானம் தயாரித்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எல்லை மீறும் கள்ள சாராய வியாபாரம்
எல்லை மீறும் கள்ள சாராய வியாபாரம்

By

Published : Apr 15, 2020, 10:00 AM IST

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடிவருகின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனைசெய்ய, டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபாட்டில்களைத் திருடும் சம்பவங்களும் நடந்துவருகின்றன.

இதற்கு அங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடை மதுவுடன் போதைப் பொருள்களைக் கலந்து புதுவித மதுபானமே தயார்செய்துள்ளனர்.

அப்பகுதியில் காவல் துணைகண்காணிப்பாளர் மதியழகன், காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள தோட்டம் ஒன்றில் சிலர் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர்.

காவல் துறையினரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, காவல் துறையினர் மூன்று பேரைச் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் சிலைமலைபட்டி டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஆனந்தபாபு (32), நரசிங்காபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (48), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சிவபெருமாள் எனத் தெரியவந்தது.

அவர்கள் நின்றிருந்த இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் காலியாகக் கிடந்தன. அருகில் ஒரு நெகிழி டிரம்மில் மதுபானம் நிரப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து பிடிபட்ட மூன்று பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் டாஸ்மாக் மதுபானத்துடன், கூடுதல் போதைக்காக வேறு சில பொருள்களைக் கலப்படம்செய்து புதுவித மதுபானம் தயாரித்து டிரம்மில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களுக்குக் கீழப்பட்டி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வம் மதுபாட்டில்களைத் திருட்டுத்தனமாக மொத்தமாக கொடுத்ததும் தெரியவந்ததால், செல்வமும் கைதுசெய்யப்பட்டார்.

இதேபோல் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஆனந்தபாபுவும் தன் பங்குக்கு மதுபானங்களைக் கொண்டுவந்ததாகத் தெரியவருகிறது. இதைத்தொடர்ந்து கைதான நான்கு பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details